தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்குக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு; சாலைகள் வெறிச்சோடியது


தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்குக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு; சாலைகள் வெறிச்சோடியது
x
தினத்தந்தி 28 Jun 2020 10:45 PM GMT (Updated: 28 Jun 2020 10:01 PM GMT)

கடைகள் அடைப்பு, வாகனங்கள் செல்ல தடை என தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்குக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். பிரதான சாலைகள் வாகனங்கள் இன்றி வெறிச்சோடியது.

சென்னை,

சீனாவில் உருவெடுத்த ஆட்கொல்லியான கொரோனா வைரஸ், தமிழகத்திலும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மக்களின் வாழ்வதாரம், பொருளாதார நிலைமையை கருத்தில்கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது.

5-ம் கட்டமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வரை அமலில் உள்ளது. இதற்கிடையே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தவேண்டும் என்றால் ஊரடங்கினை கடுமையாக்கவேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் குழுவினர் தமிழக அரசுக்கு யோசனை தெரிவித்தனர். அதன்படி, கடந்த 19-ந்தேதி முதல் 30-ந்தேதி (நாளை) வரை 12 நாட்கள் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அத்தியாவசிய தேவைகள் மற்றும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பிரதான சாலைகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து, ஊரடங்கு விதிகளை மீறுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு, அபராதமும் விதித்து வருகின்றனர். இந்த காலக்கட்டத்தில் வந்த 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று எந்த தளர்வும் இன்றி முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சென்னையில் உள்ள பிரதான சாலைகள் அனைத்தும் பாலைவனம் போல வெறிச்சோடி காணப்பட்டது.

பூந்தமல்லி நெடுஞ்சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, மாதவரம் நெடுஞ்சாலை உள்பட பல்வேறு சாலைகளிலும் ஆம்புலன்ஸ், சரக்கு வாகனங்கள் உள்பட அத்தியாவசிய சேவைகளுக்கான வாகனங்கள் தவிர்த்து, தனிநபர் வாகனங்கள் சொற்ப அளவிலேயே பயணித்தன. முறையான பாஸ் இன்றி பயணம் செய்த வாகனங்களை போலீசார் மூலை முடுக்குகளில் நின்றுகொண்டு மடக்கிப்பிடித்து, அபராதம் விதித்தனர். அனைத்து சாலைகளிலும் போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணித்தார்கள்.

மருந்து கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்படடிருந்தது. முழுமையான ஊரடங்குக்கு பொதுமக்கள் முழுமையான ஆதரவு கொடுத்து வீட்டிலேயே முடங்கினார்கள். இதனால் சென்னையில் ஒரு சில இடங்களை தவிர்த்து எங்கும் பொதுமக்களை காணமுடியவில்லை. அதே சமயத்தில் ஓட்டேரி உள்ளிட்ட சில இடங்களில் மக்கள் அரசின் உத்தரவுகளை மதிக்காமல் கொரோனா பீதி துளி அளவும் இல்லாமல் தெருக்களுக்குள் அங்கும், இங்குமாக அலைந்து திரிந்ததை காணமுடிந்தது.

ஒட்டுமொத்தமாக முழு ஊரடங்குக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பை கொடுத்திருக்கிறார்கள். முழு ஊரடங்கு வெற்றிகரமாக கடைபிடிப்பதற்கு, மழையும் வலு சேர்த்தது. மழை காரணமாகவும் வெளியே வரமுடியாமல் பொதுமக்கள் வீட்டிலேயே இருந்தார்கள். அரசின் உத்தரவுகளை இதுபோன்று பொதுமக்கள் முழுமையாக கடைபிடித்தால் கொரோனாவை நிச்சயம் விரட்டியடிக்கலாம் என்றும், அரசு வகுக்கும் உத்தரவுகளுக்கு தொடர்ந்து பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

Next Story