கொரோனா பரவல் ஆகிவிட்டதா என்பதை தெளிவுபடுத்த தொற்றுநோய் நிபுணர் குழுவை நியமிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


கொரோனா பரவல் ஆகிவிட்டதா என்பதை தெளிவுபடுத்த தொற்றுநோய் நிபுணர் குழுவை நியமிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
x
தினத்தந்தி 29 Jun 2020 11:15 PM GMT (Updated: 2020-06-30T04:25:37+05:30)

கொரோனா பரவல் ஆகிவிட்டதா, இல்லையா? என்பதை தெளிவுபடுத்த தொற்றுநோய் நிபுணர் குழுவை நியமிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை,

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு குறித்துப் பரிசீலனை செய்ய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ நிபுணர்கள் அடங்கிய வல்லுனர் குழுவைச் சந்தித்துள்ளார். அந்தக் குழு ஊரடங்கு பரிந்துரைக்கவில்லை என்றாலும், பரிசோதனை மிக முக்கியம் அதை அதிகரிக்க வேண்டும். அதுமட்டுமே நோய்த் தொற்றைத் தடுக்கும் என்று மீண்டும் தெளிவாகப் பரிந்துரைத்துள்ளது.

கடந்த 19-ந்தேதிக்கு பிறகான ஊரடங்கு காலத்தில் சென்னையில் கொரோனா பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினமும் உயர்ந்துகொண்டு வருகிறது. மதுரை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் பாதிப்பு மிகவும் அதிகமாகியுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டுமே 413 பேர் கொரோனாவால் தமிழகம் முழுவதும் இறந்துள்ளார்கள். இந்த காலகட்டத்தில் 2.55 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்திருப்பதாக அரசு அறிவித்தாலும் மாவட்ட வாரியாகவோ, மருத்துவமனை வாரியாகவோ, பரிசோதனை செய்த எண்ணிக்கைகளை இதுவரை அரசு வெளியிடவில்லை.

மின் கட்டணம் ஒவ்வொரு குடும்பத்தையும் “மின்னல்“ போல் தாக்குகிறது. அதைக் குறைக்க எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. கடுமையான வருவாய் இழப்பினைச் சந்தித்துள்ள பல்வேறு தரப்பு மக்களும் அடுத்து தங்கள் வாழ்க்கை நொறுங்கிப் போகுமோ? என்று தவித்துக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா சோகம், வாழ்வாதாரம் பாதிப்பு, வருவாய் தேடும் குடும்பத் தலைவனை கொரோனாவிற்கு பறிகொடுத்த கொடுமை போன்றவற்றால் மாநிலம் முழுவதும் தற்கொலைகள் தொடர்ந்து வருவது அதிர்ச்சியளிக்கிறது.

எனவே வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அடித்தட்டு மக்களுக்கும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் உயிரூட்டும் வகையில் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5 ஆயிரம் நேரடியாகப் பண உதவி வழங்கிட வேண்டும். ஊரடங்கு கால மின்கட்டணத்தை ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி, உடனடியாகக் குறைத்திட வேண்டும்.

ரேஷன் கடைகள் மூலம் அனைவருக்கும் விலையில்லா முகக்கவசங்களை அளித்திட வேண்டும். பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் மற்றும் பிற வருடங்களின் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து அவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும். முன்களப் பணியாளர்களாக விளங்கும் மருத்துவர், செவிலியர், சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்து கொரோனா போர் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களை அளித்திட வேண்டும்.

கொரோனா நோய்ப் பாதிப்புக்குள்ளான முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் அரசு அறிவித்த நிதியை உடனே வழங்கிட வேண்டும். கொரோனா சோதனை குறித்த விவரங்களை விமான நிலையம் வாரியாக, மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட வாரியாக வழங்கிட வேண்டும். கொரோனா சமூகப் பரவல் ஆகிவிட்டதா, இல்லையா? என்பது பற்றி, தெளிவான அறிக்கை பெற, தொற்று நோய் மருத்துவ நிபுணர்கள் கொண்ட தனிக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும்.

இந்தியாவில் 2வது அதிகபட்ச நோய்த் தொற்றுக்கு உள்ளான டெல்லியில் நடைபெறும் கொரோனா பரிசோதனை விவரத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். டெல்லி அரசு கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பதோடு குருதி நீரியல் பரிசோதனை முறையில் சோதனை செய்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் அனைவரையும் விரைவில் கண்டறியத் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அது போன்ற பரிசோதனை முறையை தமிழ்நாட்டிலும் கடைப்பிடித்து ஆபத்தான சூழலை அடியோடு நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story