மாநில செய்திகள்

ஜெயராஜ்-பென்னிக்ஸ் கைதின் போது என்ன நடந்தது? போலீசாரின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் + "||" + What Happened During Jeyaraj-Beniks Arrests? CCTV Footage Counters Cops

ஜெயராஜ்-பென்னிக்ஸ் கைதின் போது என்ன நடந்தது? போலீசாரின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள்

ஜெயராஜ்-பென்னிக்ஸ் கைதின் போது என்ன நடந்தது? போலீசாரின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள்
சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ்-பென்னிக்ஸ் கைதின் போது உயிரிழப்பில் காவல்துறை நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த  வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளை தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தது. ஐகோர்ட் உத்தரவின்பேரில் மாஜிஸ்திரேட் விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸ்  அதிகாரிகளை விடுவிக்க முயற்சி நடப்பதாக புகார் எழுந்தது. மேலும் அதிகாரிகள் தரப்பில், தந்தை, மகனுக்கு உடல் நலக்குறைவு, மூச்சு திணறலால் உயிரிழந்ததாக மாற்று கருத்துகள் வந்ததாலும்  மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து வணிகர்கள் சங்கத்தினர், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் வழக்கை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றி விசாரிக்க வலியுறுத்தினர். 

இதற்கிடையே, சேலம் மாவட்டம் தலைவாசலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பான  வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு விசாரணைக்கு வரும்போது, இதனை தெரிவித்து, அனுமதி பெற்று சி.பி.ஐ.யிடம் இவ்வழக்கு ஒப்படைக்கப்படும் என்றார். 

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, சாத்தான்குளத்தில் தந்தை - மகன் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம் செய்ய அனுமதி கேட்டு தமிழக அரசு சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவது தமிழக அரசின் கொள்கை முடிவு. அரசின் கொள்கை முடிவுக்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை என்று கருத்துத் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தற்போது இந்த வழக்கு குறித்த விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 

இந்த நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது காவல்துறை பதிவுசெய்த முதல்தகவல் அறிக்கையில் உள்ள விவரங்களையும் மறுக்கும் வகையில் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது அது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

சிசிடிவி காட்சியில், போலீசார் அழைத்ததும் செல்போன் கடை அருகில் இருந்து ஜெயராஜ் போலீஸ் வாகனத்தை நோக்கி செல்வதும், தொடர்ந்து சிறிது நேரத்தில் தனது தந்தையை போலீசார் அழைத்து செல்வதை அறிந்து பென்னிக்ஸ் கடையில் இருந்து வெளியே வருவதும், பின்னர் அவர் கடையை பூட்டி விட்டு, நண்பருடன் மோட்டார் சைக்கிளில் போலீஸ் நிலையத்துக்கு புறப்பட்டு செல்வதும் பதிவாகி இருந்தது.

மேலும், அப்போது பக்கத்து கடைகள் திறந்து இருந்ததும், செல்போன் கடை முன்பு கூட்டமும், எந்தவித தகராறும் நடைபெறவில்லை என்பதும் பதிவாகி உள்ளது. இது போலீசாரின் முதல் தகவல் அறிக்கைக்கு முற்றிலும் மாறாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவர் மீதும் காவல்துறையினர் வழக்கு ஒன்றை பதிவுசெய்திருந்தனர். இது தொடர்பாக பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில்,

ஏபிஜெ மொபைல்ஸ் கடை அரசு அனுமதியளித்துள்ள நேரத்திற்கு பிறகு, அரசு உத்தரவை மீறி திறந்திருந்தது. கடையின் முன்பு கடையின் உரிமையாளர் ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்ஸ் என்பவரும் அவரது நண்பர்களும் நின்று கொண்டிருந்தனர். நாங்கள் அவர்களைக் கூட்டம் போட வேண்டாம், அமைதியான முறையில் செல்லுங்கள் என்று சொன்னோம். அதற்கு மற்றவர்கள் கலைந்து சென்றுவிட்டார்கள். மேற்படி ஜெயராஜூம் அவரது மகன் பென்னிக்சும் தரையில் அமர்ந்து கொண்டு போக முடியாது என்று சொல்லி தரையில் உருண்டார்கள். அதில் அவர்களுக்கு ஊமைக்காயம் ஏற்பட்டது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் போலீசாரின் முதல் தகவல் அறிக்கைக்கு மாறாக வெளியான சி.சி.டி.வி. கேமரா காட்சி இந்த வழக்கில் திடீர் திருப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.