தளர்வு இல்லாத முழு ஊரடங்கு சென்னையில் சாலைகள் வெறிச்சோடின


தளர்வு இல்லாத முழு ஊரடங்கு சென்னையில் சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 6 July 2020 4:15 AM IST (Updated: 6 July 2020 2:46 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் 3-வது முறையாக ஞாயிற்றுக்கிழமையில் கடைபிடிக்கப்பட்ட தளர்வு இல்லாத முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின.

சென்னை,

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொரோனா வைரஸ் நம் நாட்டிலும் தனது கோரத்தாண்டவத்தை காண்பித்து வருகிறது. தமிழகத்திலும் அதன் வீரியம் குறையவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 6-வது கட்டமாக ஜூலை 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பின் அளவை பொறுத்து மாவட்டங்களுக்கு தக்கவாறு தளர்வுகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த ஜூன் 19-ந் தேதி முதல் நேற்று வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் 2 முறைகள் ஞாயிற்றுக்கிழமை தோறும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, நேற்றும் சென்னையில் 3-வது முறையாக நேற்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) தளர்வு இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. சென்னையில் நேற்றைய தளர்வில்லாத முழு ஊரடங்கு உத்தரவையொட்டி, நகரின் பிரதான சாலைகளான அண்ணா சாலை, மெரினா கடற்கரை சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு 100 அடி சாலை, வடபழனி ஆற்காடு சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்பட அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

பொதுவாக சென்னையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் போது பல சொகுசு கார்கள் மற்றும் இளைஞர்களின் மோட்டார் சைக்கிள்கள் சாலையில் வலம் வரும். அவற்றை போலீசார் மடக்கி பிடித்து பறிமுதல் செய்வது மற்றும் வழக்கு தொடுப்பது என்று இருக்கும்.

ஆனால், நேற்றைய தளர்வு இல்லாத முழு ஊரடங்கில் இது போன்ற தனிநபர்களின் சொகுசு கார்கள் எதுவும் பெரிதாக தென்படவில்லை. அதே போன்று ஒரு சில மோட்டார் சைக்கிள்களே சாலையில் ஓடின. அவை பெரும்பாலும் மருத்துவ தேவைக்காகவே வந்தன. எனவே, எப்போதும் முழு ஊரடங்கின் போது பரபரப்பாக சாலையில் செல்லும் வாகனங்களை மடக்கி பிடிக்கும் போலீசாருக்கு நேற்று அத்தகைய நெருக்கடி இல்லை என்றே சொல்லலாம்.

சென்னையில் சாலைகள் இப்படி வெறிச்சோடி கிடப்பதை பார்க்கும் போது, மக்கள் மத்தியில் கொரோனா நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு சுயக்கட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையே காண்பிக்கிறது. இன்று முதல் சென்னையில் தளர்வுகள் அமலுக்கு வந்தாலும் அரசு கூறும் அறிவுரைகளை ஏற்று சமூக இடைவெளி மற்றும் முகக்கவசங்களை அணிவதை மக்கள் கடைபிடித்தால் கொரோனா என்ற கொடிய அரக்கனின் மனித சங்கிலி தொடர்பை துண்டித்து விடலாம் என்ற நம்பிக்கை பிறக்கும்.

Next Story