சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம் சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு அனுமதி தமிழக அரசு தகவல்


சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம் சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு அனுமதி தமிழக அரசு தகவல்
x
தினத்தந்தி 7 July 2020 11:45 PM GMT (Updated: 7 July 2020 8:42 PM GMT)

சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணையில் தந்தை- மகன் இறந்த சம்பவத்தில், சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை- மகனுமான ஜெயராஜ் (வயது 58), பென்னிக்ஸ் (31) ஆகியோர் ஊரடங்கு காலத்தில், கடையை அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் மேலாக திறந்து வைத்திருந்த குற்றச்சாட்டில், கடந்த மாதம் 19-ந்தேதி இரவு கைது செய்யப்பட்டனர்.

பின்னர், சாத்தான்குளம் போலீஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், இருவரும் அங்கு கடுமையாக தாக்கி சித்ரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. ஜூன் 20-ந்தேதி அதிகாலை சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில், 22-ந்தேதி பென்னிக்சும், 23-ந்தேதி ஜெயராஜூம் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் சாத்தான்குளம் மட்டுமல்லாது, தமிழகத்திலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், ஜெயராஜின் மனைவி செல்வராணி, தனது கணவர் மற்றும் மகன் ஆகியோர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இருவரின் உடல் பிரேதபரிசோதனையை ‘வீடியோ’ பதிவு செய்ய உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நெல்லை அரசு ஆஸ்பத்திரி முதல்வர், 3 டாக்டர்கள் கொண்ட குழுவைக் கொண்டு பிரேதபரிசோதனை செய்யவும், அதை வீடியோவில் பதிவு செய்யவும் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு மதுரைக் கிளை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது, தென்மண்டல ஐ.ஜி., தூத்துக்குடி எஸ்.பி. ஆகியோர் ஆஜராகி, வழக்கில் சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷன் மற்றும் தலைமைக் காவலர்கள் 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டதாகவும், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனை அறிக்கையையும், வீடியோ பதிவையும் கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 26-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். ஆனால், குறிப்பிட்ட தேதியில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிரேதபரிசோதனை அறிக்கையும், வீடியோ பதிவும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு, ஊரடங்கு உத்தரவு காரணமாக கூறப்பட்டது.

இந்தநிலையில், நீதிபதிகள் உத்தரவின்பேரில் கடந்த மாதம் 28-ந்தேதி, கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன், சாத்தான்குளம் காவல் நிலையம் சென்று விசாரணை நடத்தினார். ஆனால், அவரது விசாரணைக்கு போலீசார் ஒத்துழைக்கவில்லை. அதேநேரத்தில், தலைமை பெண் காவலர் ரேவதி, ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டபோது நடந்தது என்ன? என்பது குறித்து பரபரப்பு சாட்சியம் அளித்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாகவும், சி.பி.ஐ. இந்த வழக்கை கையில் எடுக்கும் வரை, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த ஐகோர்ட்டு மதுரைக் கிளை அதிரடியாக உத்தரவிட்டது.

அதன்படி, நெல்லைசி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. அனில்குமார் உடனடியாக விசாரணையை தொடங்கினார். தந்தை-மகன் இரட்டை கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷன் அன்று இரவிலேயே கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், போலீசார் முருகன், முத்துராஜ் பின்னர் கைது செய்யப்பட்டார்கள்.

இதில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவினரின் பங்கு குறித்தும் புகார்கள் எழுந்ததால் அவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. பல மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு கலைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை பரபரப்பாக நடந்து வரும் நிலையில், தற்போது மத்திய அரசு இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் குறித்து மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ.) மூலம் விசாரிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம் ஒன்றை அவர் எழுதினார். இந்தநிலையில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்த கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு தற்போது அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சி.பி.ஐ. விசாரணை எப்போது தொடங்கும்?


இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. தரப்பில் கேட்டபோது, ‘டெல்லியில் இருந்து சி.பி.ஐ. இயக்குனர் விசாரணையை தொடங்குவதற்கு அனுமதி கொடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிப்பார். சி.பி.ஐ.யின் குற்றப்புலனாய்வு பிரிவு இந்த வழக்கை விசாரிக்கும். சென்னை பெசன்ட்நகரில் உள்ள ராஜாஜி பவனில் சி.பி.ஐ. சிறப்பு குற்றப் புலனாய்வு பிரிவு செயல்படுகிறது. போலீஸ் சூப்பிரண்டு அல்லது துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்தில் ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் விசாரணை இந்த வார இறுதிக்குள் தொடங்கலாம். டெல்லியில் இருந்து கூட சிறப்பு புலனாய்வு படை விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது.

சி.பி.சி.ஐ.டி. போலீசார், ஏற்கனவே தனியாக வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்திருந்தாலும், சி.பி.ஐ. விசாரணை தொடங்கியதும், தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் தொடங்கும்’ என்று தெரிவிக்கப்பட்டது.


Next Story