தமிழகத்தில் சிறப்பு ரெயில் சேவை 31-ந்தேதி வரை ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


தமிழகத்தில் சிறப்பு ரெயில் சேவை 31-ந்தேதி வரை ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 15 July 2020 3:24 AM IST (Updated: 15 July 2020 3:24 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் சிறப்பு ரெயில் சேவை 31-ந்தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

சென்னை, 

கொரோனா ஊரடங்கால் பயணிகள் ரெயில் சேவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் 7 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டது. அதன்படி திருச்சி-செங்கல்பட்டு(வழி விருத்தாசலம்), மதுரை-விழுப்புரம், கோவை-காட்பாடி, திருச்சி-செங்கல்பட்டு (வழி மயிலாடுதுறை), அரக்கோணம்-கோவை, கோவை-மயிலாடுதுறை, திருச்சி-நாகர்கோவில் மார்க்கத்தில் ரெயில்கள் சென்று வந்தன.

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் மீண்டும் கட்டுப்படுத்தப்பட்டதால் ஜூன் மாதம் 29-ந்தேதி முதல் இன்று (புதன்கிழமை) வரை மேற்கண்ட சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து 16-ந்தேதி (நாளை) முதல் சிறப்பு ரெயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் ஜூலை 31-ந்தேதி வரை சிறப்பு ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. சென்னை- டெல்லி இடையே ராஜ்தானி சிறப்பு ரெயில் மட்டும் வழக்கம் போல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் அரசு- தனியார் பஸ் போக்குவரத்தை இயக்குவதற்கான தடை வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் சிறப்பு ரெயில் சேவையும் 31-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story