ஆன்லைன் மூலம் அரசு கலை கல்லூரிகளில் சேர 20-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு


ஆன்லைன் மூலம் அரசு கலை கல்லூரிகளில் சேர 20-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு
x
தினத்தந்தி 17 July 2020 3:45 AM IST (Updated: 17 July 2020 2:03 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் மூலம் அரசு கலை கல்லூரிகளில் சேர வருகிற 20-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

சென்னை, 

இதுதொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் உயர்கல்வி துறையின் கீழ் தற்போது 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றது. இவற்றில் சுமார் 92 ஆயிரம் இளநிலை பட்டவகுப்பு சேர்க்கை இடங்கள் உள்ளன. இதற்கு சுமார் 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள். இதுபோன்று தமிழகத்தில் உயர்கல்வித்துறையின் கீழ் 51 அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் இயங்கிவருகிறது.

மேலும் தொழில் வணிகத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலும் தொழில்நுட்ப கல்வித்துறையின் கல்வி பாடத்திட்டத்திலும் வரக்கூடிய 3 இணைப்பு கல்லூரிகளையும் சேர்த்து மொத்த ஒப்பளிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 890 ஆகும். இதற்கு சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள்.

பொதுவாக விண்ணப்பதாரர்கள் தாங்கள் சேரவிரும்பும் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்று பூர்த்திசெய்து விண்ணப்பக் கட்டணங்களை வங்கி வரைவோலையாக இணைத்து தபாலிலோ, நேரிலோ சமர்ப்பிப்பார்கள். இதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை மாணவர்கள் கல்லூரிகளுக்கு வரவேண்டிய சூழ்நிலை உள்ளது.

தற்போது முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, புதிய முயற்சியாக அரசு கலை கல்லூரிகளுக்கு www.tngasa.in மற்றும் www.tndceonline.org என்ற இணையதள முகவரியிலும், அதேபோல் அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு www.tngptc.in மற்றும் www.tngptc.com என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள் 20-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் இந்த இணையதளம் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்யலாம். இதுகுறித்த சந்தேகங்களை நிவர்த்திசெய்து கொள்ள 044-22351014, 044-22351015 என்ற கட்டுப்பாட்டு அறை எண்களை தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story