ஆகஸ்டு 31-ந்தேதிக்குள் தனியார் பள்ளி, கல்லூரிகள் 40 சதவீத கட்டணம் வசூலிக்கலாம் - ஐகோர்ட்டு உத்தரவு


ஆகஸ்டு 31-ந்தேதிக்குள் தனியார் பள்ளி, கல்லூரிகள் 40 சதவீத கட்டணம் வசூலிக்கலாம் - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 18 July 2020 3:30 AM IST (Updated: 18 July 2020 2:20 AM IST)
t-max-icont-min-icon

கல்விக் கட்டணத்தில் 40 சதவீதத்தை ஆகஸ்டு 31-ந்தேதிக்குள் மாணவர்களிடம் இருந்து கல்வி நிறுவனங்கள் வசூலித்துக் கொள்ளலாம் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கல்வி நிறுவனங்கள் கல்விக்கட்டணத்தை வசூலிக்க கூடாது என்று தமிழக அரசு கடந்த ஏப்ரல் 20-ந்தேதி உத்தரவிட்டது. அதே நேரம், ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு கல்வி நிறுவனங்கள் ஊதியம் வழங்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள், சென்னை ஐகோர்ட்டில் வழக்குகளை தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணையின்போது, 3 தவணையாக கல்வி கட்டணத்தை வசூலிக்க தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க பரிசீலிப்பதாக தமிழக அரசு கூறியது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பிலும், மனுதாரர்கள் தரப்பிலும் வக்கீல்கள் ஆஜராகி வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு பொருளாதார நடவடிக்கையை ஸ்தம்பிக்க வைத்து விட்டது. வருமானம் இல்லாததால் சேமிப்பு எல்லாம் கரைகிறது. தற்போது அனைவரும் மிக மோசமான நிலையை எதிர்கொள்வதால், இந்த நீதிமன்றம் மிக எச்சரிக்கையுடன் தமிழக அரசின் நிர்வாக நடவடிக்கையை கையாளுகிறது. அதேநேரம் கல்வி நிறுவனங்களும், பெற்றோரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்வு காணவேண்டும். இவற்றை கருத்தில் கொண்டு கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கின்றேன்.

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் சுயநிதி கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும். தற்போது தனியார் கல்வி நிறுவனங்கள் மொத்த கல்விக் கட்டணத்தில் 75 சதவீதத்தை 3 தவணைகளாக வசூலிக்கவும், மீதமுள்ள 25 சதவீதத் தொகையை கல்வி நிறுவனங்கள் திறந்த பின்னர் வசூலித்துக் கொள்ளவும் அனுமதி வழங்க உள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், தற்போது நிலவும் சூழ்நிலையில் கல்வி நிறுவனங்கள் உடனடியாக திறக்க வாய்ப்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. எனவே, கடந்த கல்வியாண்டில் வசூலித்த கல்விக் கட்டணத்தில் 40 சதவீதத்தை பெற்றோரிடம் இருந்து கல்வி நிறுவனங்கள் வசூலித்துக் கொள்ளலாம். இந்த 40 சதவீத முன்பணத்தை மாணவர்கள் வருகிற ஆகஸ்டு 31-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும்.

கடந்த கல்வியாண்டில் பாக்கி வைக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணத்தை வருகிற செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும். ஒருவேளை சில மாணவர்கள், கடந்த கல்வியாண்டில் வைத்த பாக்கி கல்விக்கட்டணத்தையும், நடப்பு கல்வியாண்டுக்கான கல்விக்கட்டணத்தையும் ஏற்கனவே முழுவதுமாக செலுத்தியிருந்தால், இந்த உத்தரவை காட்டி பணத்தை திருப்பி கேட்க முடியாது. மேலும், 2-ம் தவணையாக 35 சதவீத கட்டணத்தை இயல்புநிலை திரும்பி, கல்லூரிகள், பள்ளிகள் திறக்கப்பட்டு 2 மாதங்கள் கழித்து மாணவர்களிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம்.

அதேபோல கல்வி கட்டண நிர்ணய குழு வருகிற ஆகஸ்டு மாதத்தில் இருந்து 8 மாதங்களுக்கு கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பிற வகை ஊழியர்கள், இயல்பு நிலை திரும்பும் வரை ஊதிய உயர்வு உள்ளிட்ட பண பலன்களை கேட்கக்கூடாது.

தனியார் சுயநிதி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாகவோ அல்லது நியாயமான ஒரு விலையை நிர்ணயம் செய்தோ புத்தகங்கள், நோட்டுகளை தமிழக அரசு உடனடியாக வழங்க நடவடிக்கையை எடுக்கவேண்டும். இதற்காக மிகவும் பொருளாதார நெருக்கடியில் உள்ள மாணவர்களின் பெயர்களை கல்வி நிறுவனத்திடம் இருந்து பெற்று, அவர்களுக்கு இலவசமாக புத்தகங்கள், நோட்டுகளை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்கலாம். எந்த ஒரு மாணவனும் பணம் இல்லாமல் இவற்றை வாங்க முடியாமல் தவிக்கக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையை வருகிற அக்டோபர் 5-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Next Story