மாநிலங்களவையில் தமிழக மக்களின் குரலாக ஒலிப்பேன் எம்.பி.யாக பொறுப்பேற்ற பின் ஜி.கே.வாசன் அறிக்கை


மாநிலங்களவையில் தமிழக மக்களின் குரலாக ஒலிப்பேன் எம்.பி.யாக பொறுப்பேற்ற பின் ஜி.கே.வாசன் அறிக்கை
x
தினத்தந்தி 23 July 2020 1:25 AM GMT (Updated: 23 July 2020 1:25 AM GMT)

அ.தி.மு.க. கூட்டணி சார்பில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டார். இதில் ஜி.கே.வாசன் போட்டியின்றி தேர்வானார். இதைத்தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினராக ஜி.கே.வாசன் நேற்று பொறுப்பேற்றார்.

சென்னை,

இது குறித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு த.மா.கா.வுக்கு வாய்ப்பு அளித்த முதல்-அமைச்சருக்கும், துணை முதல்-அமைச்சருக்கும், அ.தி.மு.க.வுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பா.ஜனதாவின் தேசிய தலைமைக்கும், பா.ம.க., தே.மு.தி.க., ச.ம.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அரசு, தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்தும், பலப்படுத்தியும், பொருளாதார முன்னேற்றத்தை விரைவுப்படுத்தியும், ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் அனைத்து துறைகளிலும் சீரான வளர்ச்சிக்கு தொடர்ந்து செயலாற்றி வருகிறது. தமிழக அரசு தமிழகத்தின் வளர்ச்சியிலும், மக்கள் நலனிலும் அக்கறை கொண்ட அரசாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இத்தகைய நல்ல சூழலில், தமிழகத்தின் வளர்ச்சிக்கான மத்திய, மாநில அரசின் திட்டங்களை, விரைவாகவும், முழுமையாகவும், செயல்படுத்துவதற்கு நான் உறுதுணையாக இருப்பேன். மாநிலங்களவையில் தமிழக மக்களின் குரலாக ஒலிப்பேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story