தென்காசி மாவட்டம் ரவணசமுத்திரத்தை சேர்ந்த அணைக்கரை முத்து குடும்பத்திற்கு தமிழக அரசு நிதியுதவி


தென்காசி மாவட்டம் ரவணசமுத்திரத்தை சேர்ந்த அணைக்கரை முத்து குடும்பத்திற்கு தமிழக அரசு நிதியுதவி
x
தினத்தந்தி 25 July 2020 10:11 AM GMT (Updated: 25 July 2020 10:11 AM GMT)

தென்காசியில் வனத்துறை விசாரணைக்குச் சென்று உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்; குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சி வாகைகுளத்தை சேர்ந்தவர் அணைக்கரை முத்து (வயது 72). விவசாயி. இவர் தனது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் மின்வேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடையம் வனத்துறையினர் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது அணைக்கரை முத்துவுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

இதை அறிந்த அவரது உறவினர்கள் ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கிடையே, அணைக்கரை முத்துவின் உடல் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள் நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில்,  அணைக்கரை முத்து குடும்பத்திற்கு தமிழக அரசு நிதியுதவி அறிவித்துள்ளது.  இது குறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ வனத்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்த அணைக்கரை முத்து குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும்  குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.


Next Story