ஓபிசி இடஒதுக்கீடு: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வரவேற்கிறேன் - முதலமைச்சர் பழனிசாமி


ஓபிசி இடஒதுக்கீடு: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வரவேற்கிறேன் - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 27 July 2020 2:06 PM GMT (Updated: 27 July 2020 2:06 PM GMT)

மருத்துவ படிப்பில், ஓபிசி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வரவேற்கிறேன் என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில் பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் அடங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி அதிமுக, திமுக, பாமக, மதிமுக ஆகியன உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தியதை தொடர்ந்து, தமிழக அரசும் மனுதாரராக தன்னை இணைத்துக் கொண்டது. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். அதில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மறுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்க எந்த
தடையும் இல்லை என்றும், ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் வாதத்தை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவத்துள்ளனர்.

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்க மருத்துவ கவுன்சில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற உயர் நீதிமன்றம், மாநில இட ஒதுக்கீட்டை பின்பற்ற கூடாது என எந்த விதிகளும் மருத்துவ கவுன்சில் விதிகளில் இல்லை என்றும் கூறியுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீடு கோர உரிமை உள்ளது என்றும், குறைந்தபட்ச தகுதியை மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலும் தீர்மானிக்க வேண்டும் என்றும்  நீதிபதிகள் தெரிவித்தனர்.

குறைந்தபட்ச தகுதியை மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலும் தீர்மானிக்க வேண்டும் என்றும், மத்திய - மாநில அரசுகள் இந்திய மருத்துவ கவுன்சிலுடன் ஆலோசித்து இடஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க வேண்டும்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுடன் ஆலோசித்து 3 மாதங்களில் முடிவை அறிவிக்க மத்திய அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

சமூகநீதி காத்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் சிறப்பாக மக்கள் பணியாற்றும் அம்மாவின் அரசு எடுத்த சட்ட ரீதியான நடவடிக்கையினால், மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களின் சேர்க்கைக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வரவேற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


Next Story