உடைந்த பல்புகளை மாலையாக அணிவித்து அவமதிப்பு; அண்ணா சிலையில் காவி கொடி கட்டியதால் பரபரப்பு: தி.மு.க.வினர் போராட்டம்


உடைந்த பல்புகளை மாலையாக அணிவித்து அவமதிப்பு;  அண்ணா சிலையில் காவி கொடி கட்டியதால் பரபரப்பு:   தி.மு.க.வினர் போராட்டம்
x
தினத்தந்தி 30 July 2020 8:18 PM GMT (Updated: 30 July 2020 8:18 PM GMT)

குழித்துறை சந்திப்பில் அண்ணா சிலையில் காவி கொடி கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்டித்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

களியக்காவிளை.

குமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் ஆளுயர அண்ணா சிலை உள்ளது. இந்த சிலையில் நேற்று காவி கொடி பறந்தது. மேலும், உடைந்த பல்புகள் உள்ளிட்ட பொருட்களை மாலையாக கோர்த்து அண்ணா சிலைக்கு அணிவித்து அவமதிப்பு செய்யப்பட்டு இருந்தது. நேற்று காலையில் இதனை பார்த்த தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அங்கு குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான மனோ தங்கராஜ், நகர செயலாளர் பொன்.ஆசைதம்பி மற்றும் தி.மு.க.வினர் திரளாக கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டனர். போராட்டத்தின் போது, அண்ணா சிலையை அவமதித்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க.வினர் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து தி.மு.க.வினர் அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர். இதுதொடர்பாக குழித்துறை நகர தி.மு.க. செயலாளர் பொன்.ஆசைதம்பி களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதற்கிடையே போலீசார், காவி கொடி, பல்பு மாலையை அகற்றினர்.

காவி கொடியை அண்ணா சிலையில் கட்டியவர் யார்? என்பதை கண்டுபிடிக்க அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Next Story