புதிய கல்வி கொள்கையை அதிமுக எதிர்க்காத‌து ஏன்? - திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி


புதிய கல்வி கொள்கையை அதிமுக எதிர்க்காத‌து ஏன்? - திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி
x
தினத்தந்தி 31 July 2020 3:55 PM GMT (Updated: 31 July 2020 3:55 PM GMT)

மும்மொழி கொள்கையைக் கொண்ட புதிய கல்வி கொள்கையை அதிமுக எதிர்க்காத‌து ஏன்? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வர உள்ள புதிய கல்வி கொள்கை குறித்த விவரங்கள் நேற்று முன்தினம் வெளியானது. இதற்கு ஆதரவாக பலர் பேசி வரும் நிலையில், இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மும்மொழி கொள்கையைக் கொண்ட புதிய கல்வி கொள்கையை அதிமுக எதிர்க்காத‌து ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;-

“வட இந்திய மாணவர்களைவிடத் தமிழக மாணவர்கள் பெற்றுள்ள அந்த வளர்ச்சியின் உயரத்தைச் சிதைத்திடும் நோக்கத்தில், இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்க முற்படும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து, அண்ணாவின் திருப்பெயரைக் கட்சியின் பெயரில் இணைத்துக் கொண்டிருக்கும் அதிமுக அரசின் நிலைப்பாடு என்ன?

தாய்மொழி வளரவும், ஆங்கிலம் கற்று உலகளவில் தமிழகம் சாதிக்கவும் காரணமான பேரறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கையைப் பலி கொடுத்து, தங்களுக்கு மிச்சமிருக்கும் ஆட்சிக்காலத்தை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறதா இந்த அரசு?

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தங்கள் ஆட்சிக்காலத்தில் இந்தி ஆதிக்கத்திற்கு இடம்தராமல் இருமொழிக் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்துவந்த நிலையில், அவர்களுக்கும் சேர்த்தே துரோகம் செய்யத் துணிந்து விட்டதா இன்றைய அதிமுக அரசு?” என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story