விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிமுக அரசு பாடுபடும் - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு


விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிமுக அரசு பாடுபடும் -  முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 10 Aug 2020 11:44 AM GMT (Updated: 10 Aug 2020 11:45 AM GMT)

ஏரியிலிருந்து கிடைக்கும் வண்டல் மண் விவசாயிகளுக்கே வழங்கப்படுகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள ஆட்சியர் அலுவலகத்தில் 15 கோடியே 16 லட்ச ரூபாய்  மதிப்பிலான முடிவுற்ற14 திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.

மேலும்,  20 கோடியே 86 லட்சம் மதிப்பில் 60 பணிகளுக்காக அடிக்கல் நாட்டியதோடு, 15 ஆயிரத்து 16 பேருக்கு 33 கோடியே 31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் இதுவரை எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுக்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடினார். அப்போது முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-

ஏரியிலிருந்து கிடைக்கும் வண்டல் மண் விவசாயிகளுக்கே வழங்கப்படுகிறது. 60 சதவீத குடிமராமத்து பணிகள் நிறைவடைந்துள்ளன. தடுப்பணைகள் கட்ட ரூ. 43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  தேசிய மின்னணு வேளாண் சந்தை அமைக்க ரூ. 11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு என்னென்ன வழிகளில் உதவி செய்ய முடியுமோ அதை செய்து வருகிறோம். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிமுக அரசு பாடுபடும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story