இன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை: கவர்னர், முதல்-அமைச்சர் வாழ்த்து


இன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை: கவர்னர், முதல்-அமைச்சர் வாழ்த்து
x
தினத்தந்தி 10 Aug 2020 11:45 PM GMT (Updated: 10 Aug 2020 10:05 PM GMT)

‘மக்கள் அனைவருக்கும் செழிப்பு, மகிழ்ச்சி கிடைக்க வேண்டும்’ என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து கூறியுள்ளனர்.

சென்னை, 

‘மக்கள் அனைவருக்கும் செழிப்பு, மகிழ்ச்சி கிடைக்க வேண்டும்’ என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து கூறியுள்ளனர்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்ட கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கிருஷ்ண ஜெயந்தி மிகுந்த மகிழ்ச்சியான சுப தினத்தில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன்.

கிருஷ்ண அவதாரத்தில் அவர் தீய சக்திகளை வெற்றி கொள்வதோடு, பகவத் கீதையில் உள்ள போதனைகளின் மூலம், மனிதகுலம் முன்னேறிச் செல்வதற்கான பாதையைக் காட்டியுள்ளார். இந்த புனிதமான திருநாளில், நாம் அனைவரும் நல்லொழுக்கத்தையும், நன்மை செய்வதையும் வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்போம் என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டும். இந்த பண்டிகை நமது மாநிலத்துக்கு அமைதி, நட்பு, நல்லிணக்கம், செழிப்பு, ஆரோக்கியம் ஆகியவற்றை அளிப்பதாக.

இவ்வாறு கவர்னர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

“அறம் பிறழ்கின்ற போது நான் இவ்வுலகில் அவதரிப்பேன்” என்றுரைத்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த தினமான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

“கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான், இந்தக் காற்றதை யெட்டுத் திசையிலுங் கூறிடும் திண்ணமுடையான், மணி வண்ணமுடையான் உயர் தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்” என்று மகாகவி பாரதியார், தெய்வக் குழந்தையாம் கண்ணனின் பிறப்பை போற்றி பாடுகிறார்.

ஒப்பற்ற ஞான நூலான பகவத் கீதையை உலகிற்கு அருளிய பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த இத்திருநாளில், பகவத் கீதையின் போதனைகளான அனைவரிடத்திலும் அன்பு செலுத்துதல், பலன் கருதாது கடமையை செய்தல், பற்றற்று இருத்தல், எளிமையாக அடக்கத்துடன் வாழ்தல் போன்றவற்றை மக்கள் அனைவரும் வாழ்வில் பின்பற்றி, மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்று நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் கணக்கில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், கோகுலமக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி மாநிலத்தலைவர் மணி அரசன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Next Story