ஆவடி தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்ட குண்டு துளைக்காத சட்டை - தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு


ஆவடி தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்ட குண்டு துளைக்காத சட்டை - தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 13 Aug 2020 12:58 AM GMT (Updated: 13 Aug 2020 12:58 AM GMT)

ஏ.கே.47 ரக துப்பாக்கி குண்டுகள் உள்ளே புகாத வகையில் ஆவடி தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்ட குண்டு துளைக்காத சட்டை தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை,

ஆத்ம நிர்பார் பாரத் அபியான் சுயசார்பு இந்தியா திட்டத்தை தொடங்கும் விதமாக, சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள ராணுவ சீருடை தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ள குண்டு துளைக்காத சட்டைகளை தமிழக போலீசாருக்கு வழங்கும் நிகழ்ச்சி ஆவடியில் நேற்று நடந்தது. ராணுவ தொழிற்சாலைகளின் தலைவர் ஹரி மோகன் தலைமை தாங்கினார். கூடுதல் இயக்குனர் ஜெனரல் சி.எஸ்.விஸ்வகர்மா, உறுப்பினர் ஏ.கே.ஜெயின் உள்பட அதிகாரிகள் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்தவாறு காணொலிக்காட்சி மூலமாக பங்கேற்றனர்.

அதே சமயத்தில் ஆவடியில் நடந்த விழாவில், ராணுவ தொழிற்சாலைகளின் பொதுமேலாளர் சுர்ஜித் தாஸ் மற்றும் அதிகாரிகள் தமிழக போலீசாருக்காக தயாரிக்கப்பட்ட குண்டு துளைக்காத சட்டையின் முதல் தொகுதியை, தமிழக போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. (தலைமையகம்) சீமா அகர்வாலிடம் வழங்கினார். அப்போது மத்திய தொழில் பாதுகாப்பு படை ஐ.ஜி. சோனல் மிஸ்ரா, போலீஸ் அதிகாரிகள் கே.செந்தில்குமாரி, வி.ஷியாமளா தேவி உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தமிழக போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள குண்டு துளைக்காத சட்டை ஆவடி ராணுவ சீருடை தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டு, அங்கேயே முழுமையாக தயாரிக்கப்பட்டுள்ளது. கைத்துப்பாக்கிகள், ஏ.கே.47 மற்றும் 7.62 எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கி குண்டுகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கும். உயர் அழுத்த தண்ணீரையும் உள்ளே விடாது. இதுபோன்ற பல்வேறு வசதிகள் இந்த குண்டு துளைக்காத சட்டையில் உள்ளன.

Next Story