7-ந்தேதி முதல் அனுமதி: மெட்ரோ ரெயிலை இயக்க அதிகாரிகள் தீவிரம் - ‘டோக்கன்’ முறை ரத்தாகிறது


7-ந்தேதி முதல் அனுமதி: மெட்ரோ ரெயிலை இயக்க அதிகாரிகள் தீவிரம் - ‘டோக்கன்’ முறை ரத்தாகிறது
x
தினத்தந்தி 31 Aug 2020 12:04 AM GMT (Updated: 31 Aug 2020 12:04 AM GMT)

7-ந்தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து மெட்ரோ ரெயிலை இயக்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.

சென்னை,

நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் சென்னையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவை வருகிற 7-ந்தேதி முதல் இயக்குவதற்கு அனுமதிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்துள்ளார். இதனைதொடர்ந்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் மற்றும் என்ஜினீயர்கள் மெட்ரோ ரெயிலை இயக்குவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.

சென்னையில் 32 மெட்ரோ ரெயில் நிலையங்கள் உள்ளன. இந்த ரெயில் நிலையங்களின் நுழைவு வாயிலில் பயணிகளின் கைகளில் கிருமி நாசினி தெளிப்பது, உடல் வெப்பநிலையை கணக்கிடுவது போன்ற பணிகளுக்கு தனித்தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதேபோல டிக்கெட் வழங்கும் தானியங்கி எந்திரங்கள், டிக்கெட்டுகளை ‘ஸ்கேன்’ செய்த உடன் திறக்கும் தானியங்கி கதவுகள், நகரும் படிக்கட்டுகள், லிப்டுகள், மின்சார விளக்குகள் போன்றவற்றின் செயல்பாடுகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

டிக்கெட் கவுண்ட்டர்கள், பிளாட்பாரங்கள் உள்ளிட்டவற்றில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் வட்ட வடிவிலான அடையாளங்கள் வரையும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதேபோன்று ரெயில்களிலும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான விழிப்புணர்வு வாசகங்கள் ஒட்டப்பட உள்ளது. மேலும் பணியாளர்கள் மூலம் பயணிகளுக்கு முறையான அறிவுரைகளும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரெயில் நிலையங்களில் கூடுதல் நேரம் ரெயிலை நிறுத்த முடியுமா? கூடுதல் ரெயில்கள் இயக்குவதற்கு வாய்ப்பு உள்ளதா? நெரிசலாக பயணிகள் பயணிப்பதை எவ்வாறு தவிர்ப்பது? பயணிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வாறு மேம்படுத்துவது? என்பது குறித்து மூத்த அதிகாரிகள் மற்றும் என்ஜினீயர்களிடம் ஆலோசிக்கப்பட்டு வருவதாக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ‘டிக்கெட் டோக்கன்’ முறை ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக ‘ஸ்மார்ட் கார்டு’ மற்றும் விமான நிலையங்களில்இருப்பது போன்று ‘கியூ.ஆர். கோட்’ என்று அழைக்கப்படும் முறை அமல்படுத்தப்பட உள்ளது.

பயணிகள் தங்கள் செல்போன் மூலம் மெட்ரோ ரெயில் நிறுவன செயலியில் இருந்து ‘கியூ.ஆர்.கோட்’ எண்ணை பெறலாம். மெட்ரோ ரெயில் நுழைவு வாயிலில் உள்ள எந்திரத்தில் செல்போனை காண்பித்தால் அதில் உள்ள கியூ.ஆர். கோட் எண்ணை அந்த எந்திரம் ஸ்கேன் செய்து விட்டு பயணிகளை ரெயில் நிலையத்துக்குள் செல்ல அனுமதிக்கும். இதன் மூலம் பயணிகள் தொற்று பரவலில் இருந்து விடுபட முடியும். பயணிகளின் நேரமும் மிச்சம் ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story