தமிழக சட்டப்பேரவை வரும் 14ம் தேதி கூடுகிறது


தமிழக சட்டப்பேரவை வரும் 14ம் தேதி கூடுகிறது
x
தினத்தந்தி 1 Sep 2020 11:16 AM GMT (Updated: 1 Sep 2020 11:16 AM GMT)

தமிழக சட்டப்பேரவை வரும் 14ம் தேதி கூட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சட்டப்பேரவை விதியின்படி வருடத்திற்கு இரண்டு முறை, 6 மாத இடைவெளியில் சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட வேண்டும். வழக்கமாக பிப்ரவரி மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் மற்றும் மே, ஜூன் ஆகிய மாதங்களில் மானியக்கோரிக்கை விவாதம் நடத்தப்படும். பின்னர் 6 மாதங்களுக்கு பிறகு, ஜனவரியில் ஆளுநர் உரை நிகழ்த்துவார். ஆனால் கொரோனா தொற்று அச்சம் காரணமாக சட்டப்பேரவை கூட்டம் கடந்த மார்ச் 24-ம் தேதியுடன் அவசர அவசரமாக முடிக்கப்பட்டது. 

இதனால், விரைவில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 24 ஆம் தேதிக்குள் நடத்த வேண்டியுள்ளது.  கொரோனா அச்சம் இருப்பதால் சமூக இடைவெளியை கடைப்பிடித்து புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில், கூட்டம் நடத்தும் அளவிற்கு போதிய இடவசதி இல்லை. எனவே சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தொடரை நடத்துவது குறித்து சட்டப்பேரவை செயலகம் ஆலோசனை மேற்கொண்டு வந்தது. கலைவாணர் அரங்கில் கூட்டத்தொடரை நடத்துவதற்கான பணிகளையும் பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை வரும் 14ம் தேதி கூடுகிறது. வரும் 14ம் தேதி காலை 10 மணி அளவில் கலைவாணர் அரங்கத்தில் சட்டப் பேரவை கூடும் என்று சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Next Story