நீட் விவகாரத்தில் தி.மு.க.வின் யோசனையை ஏற்க தயார் - அமைச்சர் விஜயபாஸ்கர்


நீட் விவகாரத்தில் தி.மு.க.வின் யோசனையை ஏற்க தயார் - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 15 Sep 2020 8:49 AM GMT (Updated: 15 Sep 2020 8:54 AM GMT)

நீட் விவகாரத்தில் தி.மு.க.வின் யோசனையை ஏற்க தயார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழக சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசிகையில், “கொரோனா தொடர்பான விவரங்களை வெளிப்படையாகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் வெளியிடும் ஒரே மாநிலம் தமிழகம்தான் என்று தெரிவித்தார். 

தமிழக சட்டப்பேரவையில் இன்று நீட் விவகாரம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு கொண்டுவந்தார். அப்போது நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வு விவகாரத்தில் திமுக தும்பை விட்டுவிட்டதாகவும் உச்சநீதிமன்ற உத்தரவுபடி தான் அதிமுக அரசு செயல்படுவதாகவும் கூறினார். மேலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் எட்டு மாதங்களில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறுகிறீர்கள். எப்படி நீங்கள் ரத்து செய்வீர்கள். அதற்கான வழியை சொல்லுங்கள், அதை இப்போதே செய்ய அதிமுக அரசு தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்தார். 

அப்போது பேசிய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி ஜல்லிக்கட்டு நடத்தியது போல், மத்திய அரசுக்கு வேண்டிய அழுத்தத்தை அளித்து நீட் தேர்வில் இருந்தும் விலக்கு பெற வேண்டும் என வலியுறுத்தினார். 

இதற்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “ஜல்லிக்கட்டு விவகாரம் போல் நீட் தேர்வில் பெற முடியாது. ஜல்லிக்கட்டு விவகாரம் என்பது தமிழகம் சார்ந்தது ஆனால் நீட் விவகாரம் நாடு முழுவதுமான பிரச்னை. அதனால் ஜல்லிக்கட்டு போன்ற வழி நீட் விவகாரத்தில் இல்லை. ஊசியில் நூல் நுழையும் அளவிற்கு இடம் கிடைத்தாலும் அதிமுக அரசு விலக்கு பெற்றுவிடும்” என்று அவர் தெரிவித்தார்.

Next Story