தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 18 Sept 2020 1:53 PM IST (Updated: 18 Sept 2020 1:53 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பசலனம், பருவகாற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,

வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், புதுவையிலும் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பந்தலூர் (நீலகிரி) 5, சின்னக்கல்லார் (கோவை) 4, தேவலா (நீலகிரி), திருவாலங்காடு (திருவள்ளூர்) 3 செமீ மழை பதிவாகி உள்ளது. 

வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 20ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இன்று முதல் செப்.21 வரை மன்னார் வளைகுடா பகுதிகளிலும், இன்று அந்தமானிலும் 45-55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story