“முடிந்தால் திமுக ஆட்சியில் பெரியாரை தொட்டுப்பாருங்கள்” - திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சவால்


“முடிந்தால் திமுக ஆட்சியில் பெரியாரை தொட்டுப்பாருங்கள்” - திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சவால்
x
தினத்தந்தி 27 Sep 2020 7:58 AM GMT (Updated: 27 Sep 2020 7:58 AM GMT)

முடிந்தால் திமுக ஆட்சியில் பெரியாரை தொட்டுப்பாருங்கள் என்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சவால் விடுத்துள்ளார்.

திருச்சி, 

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை அவமதிப்பட்டது. சிலை மீது காவி வர்ணம் ஊற்றியும், செருப்பு வீசியும் மர்மநபர்கள் அவமதிப்பு செய்தனர். இதனைத்தொடர்ந்து சிலை அவமதிப்பில் ஈடுபட்டவர்கள் குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனைத்தொடர்ந்து திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் “முடிந்தால் திமுக ஆட்சியில் பெரியாரை தொட்டுப்பாருங்கள்” என்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சவால் விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒரு சிலர் கட்சி வளர்ப்பதாக எண்ணி, திராவிட இயக்க தலைவர்கள் மீது பொய்யான பிரச்சாரம் செய்து, பெரியார் சிலையை சேதப்படுத்துகின்றனர். பெரியார் சிலை அவமதிப்புகளை தடுக்க, தொடக்கத்திலேயே தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இருந்தால், இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடந்து இருக்காது. திமுக ஆட்சியில் இருக்கும் போது, முடிந்தால் பெரியாரை அவர்கள் தொட்டு பார்க்கட்டும்” என்று கே.என்.நேரு சவால் விடுத்தார்.

முன்னதாக திருச்சி இனாம் குளத்தூரில் அவமதிக்கப்பட்ட பெரியார் சிலைக்கு, திமுக முதன்மைச் செயலாளர் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Next Story