நிர்வாக திறமை உடைய சீர்திருத்தவாதியாக மோடி திகழ்கிறார்; பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா புகழாரம்
அரசின் தலைமை பொறுப்பு ஏற்று 20-வது ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று அடியெடுத்து வைக்கிறார். நிர்வாக திறமை, செயலாக்கம் உடைய சீர்திருத்தவாதியாக மோடி திகழ்கிறார் என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை,
குஜராத் முதல்-மந்திரியில் இருந்து தொடங்கி தற்போதைய பிரதமர் பதவி வரை என அரசின் தலைமை பொறுப்பில் 20-வது ஆண்டில் இன்று (புதன்கிழமை) அடியெடுத்து வைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து, பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இந்திய வரலாற்றில் ஒரு மைல் கல் ஆகும். அன்றைய தினம் தான் முதல் முறையாக குஜராத் மாநிலத்தின் முதல்-மந்திரியாக நரேந்திர மோடி பதவி ஏற்றார். அப்போதில் இருந்து அரசின் தலைமை பொறுப்பில் ஒரு தேர்தலிலும் அவர் தோல்வியை சந்தித்ததே கிடையாது. பிரதம மந்திரியாக ஒரு தேசிய பாத்திரத்தையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். அதன் வாயிலாக, அக்டோபர் 7-ந்தேதி (இன்று) அரசின் தலைமை பொறுப்பில் 20-வது ஆண்டில் நரேந்திர மோடி அடியெடுத்து வைக்கிறார்.
ஒவ்வொரு முறையும் அதிக அளவிலான மக்களின் நம்பிக்கையை மீண்டும், மீண்டும் வென்றெடுப்பதற்கான அவருடைய திறனை பற்றியே இது பேசுகிறது. குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்த நாட்களில் இருந்தே மோடி தனது சகாக்களிடம் இருந்து வேறுபட்டே காணப்பட்டார். ஒரு காலத்தில் அதிகார சீர்திருத்தம் என்றால் அரசியல் தற்கொலை என்று பொருள். விவசாயிகளுக்கு நம்பிக்கையளித்து குஜராத்தின் மின் துறையில் சீர்திருத்தத்தை ஏற்படுத்தினார். குஜராத்தை மின் மிகை மாநிலமாக மாற்றியதோடு, அங்குள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்சாரத்தை கொண்டு சென்றார். பிரதமராகவும் ஒவ்வொரு வீட்டுக்கும், ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்சாரம் கொண்டு சென்றார்.
தேசிய அளவிலான முதலீட்டாளர்கள் மாநாடு என்பது அப்போது அரிது. 2003-ம் ஆண்டு குஜராத்தில் முதலீட்டாளர் மாநாட்டை மோடி தொடங்கினார். அன்றில் இருந்து முதலீட்டாளர்கள் மாநாடும், குஜராத் மாநிலமும் உலக அளவிலான முதலீட்டாளர்கள் மத்தியில் நன்கு அறிந்ததாக மாறிவிட்டது. அதேபோல அன்னிய நேரடி முதலீட்டில் சாதனை படைப்பதையும் அவர் உறுதி செய்து வருகிறார். புகழ் பெற்ற குஜராத் மாதிரிக்கு எந்த அறிமுகமும் தேவை இல்லை.
கொள்கை ரீதியாக முடக்குதலுக்கு உள்ளாக்கப்படும் நிர்வாகத்தை மரபுரிமையாக பெற்றிருந்தாலும், துப்புரவு, கிராமப்புறங்களில் மின்சார வினியோகம், அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் உகந்த நீர் வினியோகம் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் உள்பட மோடி அவருடைய ஒவ்வொரு திட்டங்களுக்கும் சிறப்பு இலக்குகளை நிர்ணயம் செய்பவர்.
மாநில அளவிலும், தேசிய அளவிலும் நிர்வாகத்தில் திறமையாக, செயலாக்கம் உடைய மற்றும் சீர்திருத்தவாதியாக அவர் திகழ்கிறார். நிர்வாகத்தில் தொடர்ந்து செல்ல இது தூண்டுகோலாக இருக்கிறது. இதனால் 2001-ம் ஆண்டு முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றதில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக அவர் கொண்டாடப்பட வேண்டியவர். நிர்வாகம் மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்ட மதிப்புகளை நரேந்திர மோடி பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் இந்தியாவிலும், இந்தியர்களிடமும் இருந்து சிறந்ததை வெளிக்கொணர்கிறார்.
அவர் தொலைநோக்கு சிந்தனை உடையவராகவும், உழைப்பாளராகவும் திகழ்கிறார். அகண்ட பார்வையை கொண்டு வருவதற்கு தேவையான மனநிலை அவரிடம் உள்ளது. அந்த அகண்ட பார்வையை அடைவதற்கான துல்லியமும், விடா முயற்சியும் பெற்றிருக்கிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story