தனியார் நிறுவனங்களை ஊக்குவித்தால் அரசு பல்கலைக்கழகங்கள் தனியார் மயமாகும் - டாக்டர் ராமதாஸ் அறிக்கை


தனியார் நிறுவனங்களை ஊக்குவித்தால் அரசு பல்கலைக்கழகங்கள் தனியார் மயமாகும் - டாக்டர் ராமதாஸ் அறிக்கை
x
தினத்தந்தி 18 Oct 2020 2:21 AM GMT (Updated: 18 Oct 2020 2:21 AM GMT)

தனியார் நிறுவனங்களை ஊக்குவித்தால் அரசு பல்கலைக்கழகங்கள் தனியார் மயமாகும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியா முழுவதும் உயர்கல்வி தனியார்மயமாக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பல பல்கலைக்கழகங்கள், தொழில்நிறுவனங்களுடன் கூட்டாண்மை ஏற்படுத்திக்கொண்டு புதிய படிப்புகளை வழங்க ஆயத்தமாகி வருகின்றன. புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது என்றாலும் கூட, அவை பல்கலைக்கழகங்களின் தனியார்மயத்திற்கு வழிவகுத்துவிடும் என்பது தான் கவலையளிக்கிறது.

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடிக்க முடிகிறது. இச்சூழலை மாற்றி, பல்கலைக்கழகங்களில் தனியார் நிறுவனங்கள் படிப்புகளை நடத்துவதை ஊக்குவித்தால், காலப்போக்கில் அரசு பல்கலைக்கழகங்கள் தனியார்மயமாகும்; அங்கு ஏழைக்கு கல்வி கிடைக்காது.

பல்கலைக்கழகங்கள் இப்படி மாறுவதற்கு காரணம், அவற்றின் செலவுகள் அதிகரித்து விட்டதும், அவற்றுக்கும் அரசு வழங்கும் மானியம் குறைந்து விட்டதும்தான். புதிய படிப்புகளையும் இலவசமாகவோ, குறைந்த கட்டணத்திலோ வழங்கும் அளவுக்கு பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை அதிகரித்தால் மட்டுமே பல்கலைக்கழகங்கள் தனியார்மயமாவதை தடுக்க முடியும்.

இதை உணர்ந்து கூட்டாண்மை முறையில் நடத்தப்படும் பாடங்களை படிப்படியாக பல்கலைக்கழகங்களே நேரடியாக நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும்; அதன்மூலம் பல்கலைக்கழகங்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கல்விக்கோயிலாக தொடர்ந்து திகழ்வதை உறுதிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story