அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட 7.5% உள் இடஒதுக்கீடு மசோதா: ஆளுநருக்கு முதல்வர் அழுத்தம் தராமல் இருப்பதாக மு.க.ஸ்டாலின் புகார்


அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட 7.5% உள் இடஒதுக்கீடு மசோதா: ஆளுநருக்கு முதல்வர் அழுத்தம் தராமல் இருப்பதாக மு.க.ஸ்டாலின் புகார்
x
தினத்தந்தி 19 Oct 2020 8:40 AM GMT (Updated: 19 Oct 2020 8:40 AM GMT)

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட 7.5% உள் இடஒதுக்கீடு மசோதா விவகாரத்தில், ஆளுநருக்கு முதல்வர் அழுத்தம் தராமல் இருப்பதாக மு.க.ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட 7.5% உள் இடஒதுக்கீடு மசோதா விவகாரத்தில், ஆளுநருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழுத்தம் தராமல் இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதால், 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு அளித்து தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவிற்கு இன்றுவரை தமிழக ஆளுநர் அவர்கள் ஒப்புதல் கொடுக்காமல் இருப்பதும், அதுகுறித்த எந்த அழுத்தத்தையும் ஆளுநருக்குக் கொடுக்காமல் முதலமைச்சர் திரு. பழனிசாமி வேடிக்கை பார்ப்பதும்; அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் செய்யும் துரோகமாகும்!

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என முன்பு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில், "தமிழக ஆளுநர் - முதலமைச்சர் - மத்திய பா.ஜ.க. அரசு" ஆகியோர் ஒரு ரகசியக் கூட்டணி அமைத்து, நீர்த்துப் போக வைத்தது போல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவையும் நீர்த்துப் போக வைத்து விடக்கூடாது என்றும் - நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மசோதாவிற்கு உடனடியாக தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்” என்று அதில் தெரிவித்துள்ளார்.

Next Story