தமிழகத்தில் இதுவரை 1,800 பேர் டெங்குவால் பாதிப்பு - சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் தகவல்


தமிழகத்தில் இதுவரை 1,800 பேர் டெங்குவால் பாதிப்பு - சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் தகவல்
x
தினத்தந்தி 21 Oct 2020 9:49 PM GMT (Updated: 21 Oct 2020 9:49 PM GMT)

தமிழகத்தில் மழைக்கால தொற்று நோய்கள் குறைந்துள்ளது எனவும், இதுவரை 1,800 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்

சென்னை, 

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கொரோனா தொற்று சிகிச்சை தொடர்பான ஆய்வை மேற்கொண்டார். அப்போது இதயத்தில் கத்திக்குத்து ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிப்பூரை சேர்ந்த நபரை சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

இதையடுத்து எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட அவர், மருத்துவமனையை மேலும் தரம் உயர்த்துவது தொடர்பான ஆலோசனைகளை டாக்டர்களுக்கு வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் சேலம் அரசு மருத்துவமனை உள்பட சில அரசு மருத்துவமனைகளில் எலி தொல்லைகள் இருந்தது. அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அந்தந்த அரசு மருத்துவமனை நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, அரசு மருத்துவமனை ‘டீன்’கள் உடனடியாக சரி செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு 8 ஆயிரம் பேர் டெங்கு வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த ஆண்டு 1,800 பேர் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அந்தவகையில் இந்த ஆண்டு மழைக்கால தொற்று நோய்கள் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறோம்.

இதனை கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத வணிக வளாகம் ஒன்றுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 15 நிமிடங்கள் பொது மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்படும்.

மேலும், கொரோனா தொற்றை கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர். மட்டுமே சிறந்த பரிசோதனை முறை. சி.டி ஸ்கேன் எடுப்பதால் கொரோனா நோய் தொற்றை கண்டறிய முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story