அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீட்டை பெற முதலமைச்சர் தீவிரம்


அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீட்டை பெற முதலமைச்சர் தீவிரம்
x
தினத்தந்தி 22 Oct 2020 4:20 AM GMT (Updated: 22 Oct 2020 4:20 AM GMT)

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீட்டை பெற்றே தீருவது என்பதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முனைப்பு காட்டி வருகிறார்.

சென்னை, 

தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்கள் சமூகப் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதால், அவர்களைப் பிற மாணவர்களுடன் ஒரே நிலையில் ஒப்பிட்டுத் தேர்வில் வகைப்படுத்துவது என்பது சம நீதிக்கு முரணானது என்பதால் மருத்துவப் படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரை அடிப்படையில் சிறப்புச் சட்டம் இயற்றி ஆளுநர் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சில திருத்தங்கள் கோரி ஆளுநர் அதை திருப்பி அனுப்பினார். பின்னர் அந்தத் திருத்தங்களுடன் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி ஒரு சட்ட முன்வடிவு தமிழக நிறைவேற்றப்பட்டு, சட்ட மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழக அரசு நிறைவேற்றி உள்ள சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், நடப்பாண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீட்டில் சுமார் 300 இடங்கள் கிடைக்கும். இட ஒதுக்கீடு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் தர கால தாமதம் ஆவதால் கலந்தாய்வு நடைபெறுவதிலும் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. 

சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என ஒட்டுமொத்த உறுப்பினர்களும் ஆதரித்த 7.5 % இட ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில், ஒரு மாதமாகியும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் தராததால், எப்போது ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் இருந்து வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீட்டை பெற முதலமைச்சர் தீவிரம் காட்டி வருகிறார். இதுதொடர்பாக நேற்று முன்தினம் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு தர ஒப்புதல் தருமாறு ஆளுநரை சந்தித்து ஐந்து அமைச்சர்கள் வலியுறுத்தினர். இட ஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவர்கள் ஆக முடியும் என்பதை ஆளுநரிடம் எடுத்துக்கூறியதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். 

முன்னதாக 7.5 % இட ஒதுக்கீட்டுக்காக அ.தி.மு.க.வுடன் சேர்ந்து போராட தி.மு.க. தயார் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக, ஒட்டுமொத்த உறுப்பினர்களும் சேர்ந்து நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் நிராகரிக்க முடியாது என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Next Story