பெரியார் சிலை அவமதிப்பு: சம்பந்தப்பட்டவர்களைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ்


பெரியார் சிலை அவமதிப்பு: சம்பந்தப்பட்டவர்களைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ்
x
தினத்தந்தி 27 Oct 2020 7:58 AM GMT (Updated: 27 Oct 2020 7:58 AM GMT)

பெரியார் சிலை அவமதிப்பு விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

திண்டுக்கல் அருகே உள்ள ரெட்டியார்சத்திரம் சமத்துவபுரத்தில் பெரியார் சிலை ஒன்று உள்ளது. இந்த  பெரியார் சிலையில் மர்ம நபர்கள் சிலர் இரவில் காவி சாயத்தை பூசியுள்ளனர். இதுதொடர்பாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் அங்கு சென்ற ஒட்டன்சத்திரம் போலீசார், இரவில் மின் விளக்குகளை அணைத்துவிட்டு பெரியார் சிலையில் புதிய வர்ணம் பூசியுள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது குற்றவாளிகளை உடனடியாக கைது செய்துவிடுவோம் என போலீசார் உறுதியளிக்கவும் மக்கள் கலைந்து சென்றனர். போலீசாரை கண்டித்து முற்றுகையில் ஈடுபட்டனர். மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில் பெரியார் சிலை அவமதிப்பு விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து டாக்டர் ராமதாஸ்  டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

'திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் தந்தை பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசப்பட்டிருப்பது கோழைத்தனமான செயலாகும். இச்செயலைச் செய்தவர்கள் தாங்கள் கோழைகள் என்பதை மீண்டும், மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள். தந்தை பெரியாரின் கொள்கைகளைக் கொள்கைகளால் எதிர்கொள்ளத் துணிச்சல் இல்லாதவர்கள்தான் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன் பின்னணியில் உள்ள நச்சுக்கிருமிகள் அடையாளம் காணப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும்.

திருச்சி இனாம்புலியூரில் கடந்த மாதம் இதே நாளில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கும், இன்றைய நிகழ்வுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும். இரு குற்றங்களிலும் சம்பந்தப்பட்டவர்களைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்'.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story