நிஜ வாழ்க்கை 'ஹீரோ' செல்போன் பறிப்பு குற்றவாளியை விரட்டி பிடித்த சப்-இன்ஸ்பெக்டருக்கு கமிஷனர் பாராட்டு


நிஜ வாழ்க்கை ஹீரோ செல்போன் பறிப்பு குற்றவாளியை விரட்டி பிடித்த சப்-இன்ஸ்பெக்டருக்கு கமிஷனர் பாராட்டு
x
தினத்தந்தி 28 Nov 2020 10:31 AM GMT (Updated: 28 Nov 2020 10:31 AM GMT)

செல்போன் பறிப்பு குற்றவாளியை விரட்டி பிடித்த மாதவரம் சப்-இன்ஸ்பெக்டரை கமிஷனர் நிஜ வாழ்க்கை 'ஹீரோ' என்று பாராட்டினார்.

சென்னை

சென்னையில் சமீப காலமாக செல்போன் பறிப்புகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் கும்பலாக வரும் நபர்கள் தனியாக வேலை முடிந்து தனியாக வருபர்களை மிரட்டி அவர்கள் மறுத்தால் அவர்களை தாக்கி செல்போன், நகை, பணத்தை பறித்துச் செல்வது வாடிக்கையாக உள்ளது. சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கினாலும் இந்தச்செயல் தொடர்கிறது.

இதேபோன்றதொரு செல்போன் பறிப்பில் அவ்வழியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ ஒருவர் அவர்களை தனது மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்று பிடித்துள்ளார். அவரது செயல் அங்குள்ள காணொலி காட்சி மூலம் வைரலாகி வருகிறது. அதை தனது டுவிட்டர் பக்கத்தில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் வெளியிட்டு பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சென்னை, மணலி புது நகர், எம்.எம்.டி.ஏ காலனியில் வசித்து வருபவர் ரவி (56). ரவி நேற்று காலை 10.00 மணியளவில் மாதவரம் மேம்பாலம் அருகில் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் ரவியிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

தனது செல்போன் பறிக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரவி கூச்சலிட்டு கொண்டே குற்றவாளிகளை துரத்தி சென்றுள்ளார். இதை அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த மாதவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆண்டலின் ரமேஷ் கவனித்துள்ளார். உடனடியாக அவர் தனது இருசக்கரவாகனத்தில் குற்றவாளிகளை துரத்தி சென்றுள்ளார்.

சினிமா காட்சி போல் எஸ்.ஐ. ஆண்டலின் ரமேஷிடம் சிக்காமல் வேகாமாக செல்போன் பறிப்பாளர்கள் வாகனத்தை ஓட்டிச் செல்ல எஸ்.ஐ ரமேஷும் விடாமல் துரத்திச் சென்றுள்ளார். சில கிலோ மீட்டர் தூரம் துரத்தலுக்குப்பின் சாஸ்திரி நகர் பிரதான சாலையில் அவர்கள் சென்ற பைக் இடற அவர்கள் மீது தனது இரு சக்கர வாகனத்தை மோதி எஸ்.ஐ ரமேஷ் பிடிக்க முயற்சி செய்துள்ளார். அதில் பின்னால் அமர்ந்திருந்த நபர் இறங்கி ஓடிவிட, மோட்டார் சைக்கிளை ஓட்டிய நபர் மறுபடியும் தனது மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது எஸ்.ஐ.ரமேஷ் தனது பைக்கை கீழே போட்டு விட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டிய நபரை விடாமல் துரத்திச் சென்று பிடித்து கீழே சாய்த்து பிடித்துள்ளார். கீழே விழுந்ததால் வசமாக சிக்கிய திருடனை அவனது வாகனத்துடன் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்துள்ளார்.

மாதவரம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான போலீஸாரின் விசாரணையில் பிடிபட்ட நபர் பெயர் அருண்ராஜ் (20) என்பதும், சர்மா நகரில் வசிப்பதும் தெரியவந்தது. அவர் அளித்த தகவலின் பேரில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு தப்பியோடிய மாத்தூரைச் சேர்ந்த நவீன்குமார் (23) மற்றும் அவரது நண்பர் ராயபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் (19) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 11 செல்போன்கள், 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட அருண்ராஜ் அவரது கூட்டாளியுடன் சேர்த்து நேற்று (27.11.2020) காலை வடக்கு கடற்கரை காவல் நிலைய எல்லை, ராயபுரம் காவல் நிலைய எல்லை, மற்றும் மாதவரம் பகுதியில் 2 இடங்ககள் என 4 நபர்களிடம் தொடர்ச்சியாக செல்போன் பறித்துக்கொண்டு தப்பியுள்ளது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அருண்ராஜ் மீது வழிப்பறி, செல்போன் பறிப்பு உட்பட 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையிலுள்ளதும் தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

ஆண்டலின் ரமேஷ் துணிச்சலாக செல்போன் பறிப்பு குற்றவாளியை விரட்டி சென்று பிடித்த காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியிருந்தது. அதைப் பெற்ற காவல் ஆணையர் நேற்றிரவு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு பாராட்டி இருந்தார்.

செல்போன் பறிப்பு குற்றவாளியை விரட்டி பிடித்த மாதவரம் சப்-இன்ஸ்பெக்டருக்கு கமிஷனர் பாராட்டு நிஜ வாழ்க்கை 'ஹீரோ' என்று புகழாரம் சூட்டினார்

அந்த 'வீடியோ' பதிவை சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டு, 'இது திரைப்படத்தின் ஒரு காட்சி அல்ல. ஆனால் நிஜ வாழ்க்கை 'ஹீரோ' சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டலின் ரமேஷ்.' என்று புகழாரம் சூட்டினார்.

Next Story