ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு நாள் - தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ்.,ஈ.பி.எஸ் வேண்டுகோள்


ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு நாள் - தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ்.,ஈ.பி.எஸ் வேண்டுகோள்
x
தினத்தந்தி 30 Nov 2020 2:55 PM GMT (Updated: 2020-11-30T20:25:32+05:30)

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி டிச.5ஆம் தேதி அவரது நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

சென்னை,

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வரும் 5ம் தேதி அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பொது நிகழ்ச்சிகளில்‌ 200 பேர்களுக்கும்‌ மேற்படாத வகையில்‌ மக்கள்‌ கலந்துகொள்ளலாம்‌ என்று அரசு அறிவித்துள்ள நிலையில்‌, இந்நிகழ்ச்சியில்‌ பங்கேற்கும்‌ தலைமைக்‌ கழக நிர்வாகிகள்‌, அமைச்சர்‌ பெருமக்கள்‌, மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்கள்‌, கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌ அனைவரும்‌, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும்‌ வழிகாட்டு நெறிமுறைகளைப்‌ பின்பற்றியும்‌, சமூக இடைவெளியை கடைப்பிடித்தும்‌, முகக்‌ கவசம்‌ அணிந்தும்‌, இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும்‌ பங்குபெறுமாறு கேட்டுக்‌ கொள்ளப்பட்டுள்ளார்கள்.

மேலும்‌, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி, அந்தமான்‌ உள்ளிட்ட பிற மாநிலங்களிலும்‌, 5.12.2020 அன்று ஆங்காங்கே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின்‌ திருஉருவப்‌ படங்களை வைத்து, மலர்‌ அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story