மக்கள் மன்ற நிர்வாகியுடன் ரஜினிகாந்த் ஆலோசனை ; அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு


மக்கள் மன்ற நிர்வாகியுடன் ரஜினிகாந்த் ஆலோசனை ; அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
x
தினத்தந்தி 1 Dec 2020 5:19 AM GMT (Updated: 2020-12-01T10:49:07+05:30)

சென்னை போயஸ் இல்லத்தில் மக்கள் மன்ற நிர்வாகி சுதாகருடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை,

கடந்த 2017-ம் ஆண்டு ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’, என்று கூறி கால் நூற்றாண்டு கால ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு விடை தந்தார், நடிகர் ரஜினிகாந்த். ‘சட்டமன்ற தேர்தலே தனது பிரதான இலக்கு’, ‘எம்.ஜி.ஆர். ஆட்சியை என்னாலும் தரமுடியும்’, என்றும் கூறி அரசியல் களத்தில் தனது முத்திரையை பதிக்க தொடங்கினார், ரஜினிகாந்த். இதையடுத்து ரஜினிகாந்தின் அரசியல் கட்சி எப்போது தொடங்கும்? என அவரது ரசிகர்கள் வழிமேல் விழிவைத்து காத்திருந்தனர். 

இந்தநிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் 38 பேருக்கும் சென்னை வரும்படி ரஜினிகாந்த் அழைப்பு விடுத்தார். பரபரப்பான அரசியல் சூழலில் மாவட்ட செயலாளர்களை ரஜினிகாந்த் சந்திக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதன்படி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக அரசியல் நிலவரம், கொரோனா களப்பணி முதலியவை குறித்து நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ரஜினிகாந்த்,  எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எனது முடிவை அறிவிப்பேன்” என்றார். இதனால், ரஜினியின் அரசியல் நிலைப்பாடு பற்றிய அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம் என அவரது ரசிகர்கள்  காத்திருக்கின்றனர். இந்த நிலையில்,  சென்னை போயஸ் இல்லத்தில் மக்கள் மன்ற நிர்வாகி சுதாகருடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார்.  ரஜினிகாந்த்தின்  அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 


Next Story