புரெவி புயல் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்


படம்:gosur.com
x
படம்:gosur.com
தினத்தந்தி 3 Dec 2020 2:37 PM GMT (Updated: 3 Dec 2020 2:37 PM GMT)

புரெவி புயலால் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை

 இந்திய வானிலை மையம்  வெளியிட்டு உள்ள தகவலில்  புரெவி புயல் அடுத்த 3 மணி நேரத்தில் பாம்பன் பகுதியை முழுவதும் கடந்து செல்லும் . தற்போது காற்றின் வேகம் 70-80 கி.மீ வேகத்தில் வீசுகிறது. 90 கி.மீ வேகத்தில் வரை காற்று வீச வாய்ப்புள்ளது. தற்போது மணிக்கு 16கிமீ வேகத்தில் புரெவி புயல் நகர்ந்து கொண்டிருக்கிறது  மேலும்,தமிழகத்தில் தென்  கடலோர  பகுதிகளான பம்பன் - கன்னியாகுமரி இடையே இன்று இரவு தொடங்கி நாளை அதிகாலைக்குள் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் புரெவி புயலின் தாக்கம் இருக்கும் என கூறி உள்ளது.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருச்சி, தஞ்சை, திருவாரூர், திண்டுக்கல், அரியலூர், கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், நாகை, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலை எதிர்கொள்ள 490 நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், அந்த மையங்களில் 2 லட்சம் பேரை தங்கவைக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும், புயல் சமயத்தில் மக்கள் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் நெல்லையில் அமைச்சர் உதயகுமார் பேட்டியளித்துள்ளார். 

மேலும் பேரிடர் காலங்களில் மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு வெளியிடும் தகவல்கள் மட்டுமே உறுதியானவை; சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களை மக்கள் நம்பவேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Next Story