புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் ஒரே நாளில் 225 இடங்களில் மழை ; அடுத்த 3 நாட்களுக்கும் மழைக்கு வாய்ப்பு


புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் ஒரே நாளில் 225 இடங்களில் மழை ; அடுத்த 3 நாட்களுக்கும் மழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 4 Dec 2020 1:18 AM GMT (Updated: 4 Dec 2020 1:18 AM GMT)

புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் ஒரே நாளில் 225 இடங்களில் மழை பதிவாகி இருக்கிறது. அடுத்த 3 நாட்களுக்கும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. தொடர்ச்சியாக 2 புயல்கள் தமிழகத்தை நோக்கி வந்து இருக்கிறது. கடந்த மாதம் (நவம்பர்) 24-ந்தேதி வங்கக்கடலில் நிலைக்கொண்டு இருந்த நிவர் புயல் மரக்காணத்துக்கும், புதுச்சேரிக்கும் இடையே கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை கொட்டியது.

அதனைத் தொடர்ந்து வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அது தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் வலுப்பெற்றது. அந்த புயலுக்கு புரெவி என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தது. அது இலங்கை மற்றும் மன்னார் வளைகுடா பகுதியை கடந்து, நேற்று தமிழகத்தின் பாம்பன் பகுதியை அடைந்தது.

அது தொடர்ந்து தமிழக கடற்கரையோர பகுதியில் நகர்ந்து, நேற்று நள்ளிரவு முதல் கரையை கடக்க தொடங்கியது. இதனால் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று இரவு வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மழை கொட்டியது.

அந்தவகையில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 225 இடங்களில் மழைப்பொழிவு பதிவாகி இருக்கிறது. இதில் அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

புயல் கரையை கடந்தாலும், அதன் தாக்கம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு (6-ந்தேதி வரை) மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

4-ந்தேதி (இன்று) தேனி, திண்டுக்கல், நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 5-ந்தேதி (நாளை) , 6-ந்தேதி (நாளை மறுதினம்) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில், இன்று (வெள்ளிக்கிழமை) வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

புரெவி புயலை தொடர்ந்து அந்தமான் அருகே மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இந்திய வானிலை ஆய்வு மையம் அதுபற்றி உறுதிப்படுத்தவில்லை.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், 'வேதாரண்யம் 20 செ.மீ., தலைஞாயிறு, திருப்பூண்டி தலா 15 செ.மீ., நாகப்பட்டினம் 14 செ.மீ., திருத்துறைப்பூண்டி 13 செ.மீ., மயிலாடுதுறை, ராமேஸ்வரம் தலா 12 செ.மீ., முதுகுளத்தூர் 11 செ.மீ., சீர்காழி, குடவாசல், அதிராம்பட்டினம், மஞ்சளாறு தலா 10 செ.மீ., திருவாரூர், ஆடுதுறை, தாம்பரம், பட்டுக்கோட்டை தலா 9 செ.மீ., நன்னிலம், மரக்காணம், பாம்பன், திருவிடைமருதூர், திருக்கழுக்குன்றம், வலங்கைமான் தலா 8 செ.மீ., மணல்மேடு, கொள்ளிடம், கேளம்பாக்கம், காட்டுமன்னார்கோவில், வானூர், மன்னார்குடி, தரமணி, மதுக்கூர், பரங்கிப்பேட்டை, அய்யம்பேட்டை, கடலூர், நீடாமங்கலம் தலா 7 செ.மீ.' உள்பட 225 இடங்களில் மழை பதிவாகி இருக்கிறது.

Next Story