புரெவி புயல் வளிமண்டல சுழற்சியாக நிலைகொண்டுள்ளது: தமிழகம், புதுச்சேரியில் நாளை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்


புரெவி புயல் வளிமண்டல சுழற்சியாக நிலைகொண்டுள்ளது: தமிழகம், புதுச்சேரியில் நாளை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 7 Dec 2020 3:18 PM IST (Updated: 7 Dec 2020 3:18 PM IST)
t-max-icont-min-icon

புரெவி புயல் வளிமண்டல சுழற்சியாக மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் நிவர் பயுலின் தாக்கத்தினால் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கடலூர் உள்பட பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாகியது. நிவர் புயல் மழையால் ஏற்பட்ட வெள்ள நீர் வடிவதற்குள், தென் மேற்கு வங்கக்கடலில் புரெவி என்ற புதிய புயல் உருவெடுத்து, தமிழகத்தை மிரட்டியது.புரெவி புயல் பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலம் என படிப்படியாக வலுவிழந்து மன்னார் வளைகுடா பகுதியில் நகராமல் நிலைகொண்டிருந்தது. இது தற்போது வளிமண்டல சுழற்சியாக நிலைகொண்டிருக்கிறது.

புரெவி புயல் வலு குறைந்தாலும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலையில் ஒரு சில இடங்களில் விட்டு, விட்டு மழை பெய்தது. மழை ஓய்ந்த நேரத்தில் அவ்வப்போது சூரியன் தலைக்காட்டியது. மழை, வெயில் என மாறி, மாறி வானம் காட்சி கொடுத்தது.

இந்தநிலையில் தமிழகம், புதுச்சேரியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென் மண்டல வானிலை துறை தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று அதே இடத்தில் வளிமண்டல சுழற்சியாக நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 24 மணி நேரத்தில்  நாளை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் 12.45 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி, மணியாச்சியில் அதிகபட்சமாக 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக வைப்பாரில் 12 செ.மீ., கடம்பூரில் 11 செ.மீ., கயத்தாறு, சீர்காழி, காரைக்கால், சித்தாரில் தலா 9 செ.மீ., தலைஞாயிறு, மயிலாடுதுறை, வாலிநோக்கம், நீடாமங்கலத்தில் தலா 8 செ.மீ., குடவாசல், மணல்மேடு, பாளைங்கோட்டையில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Next Story