மாமல்லபுரம் புராதன சின்னங்கள் இன்று திறப்பு - தொல்லியல் துறை அறிவிப்பு
கொரோனா தொற்று ஊரடங்கால் மூடப்பட்ட மாமல்லபுரம் கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்கள் 8 மாதங்களுக்கு பிறகு வழிகாட்டி நெறிமுறைகளுடன் இன்று திறக்கப்படும் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
மாமல்லபுரம்,
கொரோனா தொற்று காரணமாக உலக புகழ்பெற்ற மாமல்லபுரம் கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல், ஐந்துரதம் உள்ளிட்ட பாரம்பரிய புராதன சின்னங்கள் கடந்த மார்ச் மாதம் 17-ந்தேதி முதல் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழக அரசு இன்று (திங்கட்கிழமை) தமிழகத்தில் உள்ள கடற்கரைகள், சுற்றுலா தலங்களை வழிகாட்டி நெறிமுறைகளுடன் திறக்க அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் இன்று வழிகாட்டி நெறிமுறைகளுடன் திறக்கப்பட உள்ளதாக மாமல்லபுரம் தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
ஒரு நாளைக்கு 2 ஆயிரம் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும், நுழைவு வாயில் பகுதியில் கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்தபிறகு, முக கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே புராதன சின்னங்களை கண்டுகளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் புராதன சின்னங்களை கண்டுகளிக்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் புராதன சின்னங்களை கண்டுகளிக்க முடியும். இரவில் மின் விளக்கு வெளிச்சத்தில் புராதன சின்னங்களை கண்டுகளிக்க அனுமதி இல்லை. தொல்லியல் துறை பார்வையாளர் கட்டண கவுண்டர்களில் பணம் செலுத்தி நுழைவு சீட்டு பெறமுடியாது என்றும், ஆன்லைன் மூலமே பணம் செலுத்தி செல்போனில் பதிவாகியுள்ள நுழைவு சீட்டை காண்பித்து உள்ளே செல்ல முடியும் என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
புராதன சின்னங்கள் இன்று திறக்கப்பட உள்ள நிலையில் அவற்றை தூய்மைப்படுத்தும் பணி தொல்லியல் துறை பணியாளர்கள் மூலம் நடைபெற்றது. 8 மாதங்களாக மூடப்பட்ட புராதன சின்னங்கள் இன்று திறக்கப்பட உள்ளதால் சுற்றுலாவை நம்பி உள்ள வியாபாரிகள், சுற்றுலா வழிகாட்டிகள், விடுதி உரிமையாளர்கள், வாடகை ஆட்டோ டிரைவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story