தடுப்பூசி வரும் வரைக்கும் “முககவசம், சமூக இடைவெளி தான் நிரந்தர தடுப்பூசி” - சுகாதாரத்துறை செயலாளர்
வர இருக்கும் தடுப்பூசியை நம்பி இருக்கக்கூடாது என்றும், முககவசம், சமூக இடைவெளி தான் நிரந்தர தடுப்பூசி என்றும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை,
சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை ஐ.ஐ.டி.யில் தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் 106 பேரில் ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதியாகி இருக்கிறது. அதேபோல், அண்ணா பல்கலைக்கழகத்தில் 279 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. எல்லா கல்லூரிகளிலும் மாணவர்களிடம் சுழற்சி முறையில் பரிசோதனை செய்து கொண்டுதான் இருப்போம். அனைத்து தரப்பு மக்களும் பரிசோதனை மேற்கொள்ள விருப்பம் இருந்தால் செய்து கொள்ளலாம். அரசு அதற்கு தயாராகவே உள்ளது.
இதுவரை சென்னையில் உள்ள கல்லூரிகளில் மட்டும் 8 ஆயிரத்து 548 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 219 பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. பொதுமக்கள் சுகாதாரத்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் முககவசம் அணியாமல் மக்கள் இருக்கிறார்கள். தடுப்பூசி வர இருக்கிறது என்ற நல்ல செய்தி இருந்தாலும், அது வரும் வரைக்கும் முககவசம், சமூக இடைவெளி தான் நிரந்தர தடுப்பூசி. அதனை மதிக்காமல் வர இருக்கும் தடுப்பூசியை நம்பி இருக்கக்கூடாது என்பதுதான் பொது சுகாதார வல்லுனர்களின் கருத்து.
மருத்துவர்களின் முயற்சியால் தான் கொரோனாவால் நாளொன்றுக்கு 127 என்ற அளவில் இருந்த உயிரிழப்பு, தற்போது 10 முதல் 12 என்ற அளவில் இருக்கிறது. 20-க்கும் மேற்பட்ட நபர்கள் எங்கே கூடி இருந் தாலும் அங்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். எனவே பொதுமக்கள் முககவசத்தை கண்டிப்பாக அணிய வேண்டும்.
கொள்கை ரீதியாக மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ வல்லுனர்களுடன், பொது சுகாதார வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்ட பின்னரே பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு குறித்து முதல்- அமைச்சர் முடிவு எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story