தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-விற்கு அணி மாறிய தேனி ஒன்றிய கவுன்சிலர் தற்கொலை


தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-விற்கு அணி மாறிய தேனி ஒன்றிய கவுன்சிலர் தற்கொலை
x
தினத்தந்தி 2 Jan 2021 6:21 AM GMT (Updated: 2 Jan 2021 6:51 AM GMT)

தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-விற்கு அணி மாறிய தேனி ஒன்றிய கவுன்சிலர் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை

தேனி மாவட்டத்தில் மொத்தம் 8 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் மூலம் ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் கடந்த ஆண்டு  ஜனவரி மாதம் 11-ந்தேதி நடந்தது. இதில் போடி, உத்தமபாளையம் ஆகிய 2 ஒன்றியக்குழு தலைவர் பதவியை அ.தி.மு.க.வும், கம்பம் ஒன்றியக்குழு தலைவர் பதவியை பா.ஜ.க.வும் கைப்பற்றியது. தேனி ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. ஆண்டிப்பட்டி ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.

சின்னமனூர், கடமலை-மயிலை, பெரியகுளம் ஆகிய ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தலுக்கு பெரும்பான்மையான கவுன்சிலர்கள் வராததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இந்த 3 ஒன்றியங்களிலும் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் 2-வது முறையாக ஜனவரி 30-ந்தேதி நடந்தது. 

கடமலை-மயிலை ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 14 வார்டுகளில், தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தலா 7 வார்டுகளில் வெற்றிபெற்றன. இதனால் ஒன்றியக்குழு தலைவர் பதவியை பிடிப்பதில் 2 கட்சியினரும் சமநிலை வகித்தன. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 11-ந்தேதி நடந்த மறைமுக தேர்தலில், தி.மு.க. வார்டு கவுன்சிலர்கள் 7 பேர் மட்டுமே பங்கேற்றனர். அ.தி.மு.க. வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. இதனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு 2-வது முறையாக நடந்த மறைமுக தேர்தலில், 2 கட்சிகளின் வார்டு கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்கவில்லை. 

இதனால் மீண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 8-வது வார்டு கவுன்சிலர் தமிழ்ச்செல்வன், அ.தி.மு.க.வில் இணைந்தார். இதனால் கடமலை-மயிலை ஒன்றியத்தில் அ.தி.மு.க. வார்டு கவுன்சிலர்களின் பலம் 8ஆக உயர்ந்தது.இதனால் மறைமுக தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்று, ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்றியது. 

இந்த நிலையில்  8-வது வார்டு கவுன்சிலர்  தமிழ்ச்செல்வன் திடீர் என தற்கொலை செய்து கொண்டார்.  தமிழ்செல்வனுக்கு 4 பெண்குழந்தைகள்  உள்ளனர்.  கடன் தொல்லையால் அவர்  அவதி பட்டு வந்ததாக கூறப்படுகிறது.  

இதனால்  தமிழ்செல்வன் மன் அழுத்ததில் இருந்தார்.  சில நாட்களுக்கு முன்பு  பூச்சி கொல்லி மருந்து குடித்து விட்டார். இதனால்  அவர் மிகவும் ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.



Next Story