புனேயில் இருந்து இன்று காலை கொரோனா தடுப்பூசிகள் சென்னை வருகை - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்


புனேயில் இருந்து இன்று காலை கொரோனா தடுப்பூசிகள் சென்னை வருகை - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 12 Jan 2021 3:47 AM GMT (Updated: 12 Jan 2021 3:47 AM GMT)

புனேயில் இருந்து இன்று காலை 10.30 மணியளவில் கொரோனா தடுப்பூசிகள் சென்னை வர உள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

நாடு முழுவதும் ஒரு கோடிக்கு அதிகமான பாதிப்புகள், 1½ லட்சத்துக்கு அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்திய இந்த கொடிய தொற்றை இந்திய எல்லைக்குள் இருந்து விரட்டியடிக்க மத்திய அரசு மிகுந்த அக்கறை எடுத்து செயல்படுகிறது. இதனால் தடுப்பூசி தயாரிக்கும் பணிகளில் அரசும், பிரதமர் மோடியும் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர்.

பல மாதங்களாக இரவு-பகலாக நடந்து வந்த ஆய்வுப்பணிகளின் பலனாகவும் முதற்கட்டமாக 2 தடுப்பூசிகள் தற்போது மக்களை காக்கும் ஆயுதங்களாக உருவாகி இருக்கின்றன. பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘கோவேக்சின்’ தடுப்பூசியும், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசி, ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் சீரம் நிறுவனத்தின் தயாரிப்பிலும் பயன்பாட்டுக்கு தயாராகி இருக்கின்றன.

இவ்வாறு தடுப்பூசிகளின் தயார் நிலை, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான மாநிலங்களின் முன் தயாரிப்புகள் அனைத்தும் சிறப்பாக இருப்பதை உறுதி செய்தை தொடர்ந்து, இந்த தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறது.

பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்டக்குழுவின் ஆலோசனைக்குப்பின், வருகிற 16-ந் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என சுமார் 3 கோடி பேருக்கும், பின்னர் 50 வயதை கடந்தவர்கள், 50 வயதுக்கு உட்பட்ட நோயாளிகள் என சுமார் 27 கோடி பேருக்கும் இந்த தடுப்பூசி போடப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை இந்த ஆட்கொல்லி வைரசால் இதுவரை 8 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 12 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தங்கள் இன்னுயிரை கொரோனாவிடம் பறிகொடுத்து உள்ளனர்.

எனவே இந்த பெருந்தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு மாநில அரசும், சுகாதாரத்துறையும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக தடுப்பூசி தயாரானவுடன் அவற்றை பயன்படுத்தி மக்களை பாதுகாப்பதற்கு முனைப்பாக செயல்பட்டு வந்தன.

தற்போது தடுப்பூசி போடும் திட்டம் தொடங்க இருக்கும் நிலையில், அவற்றுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் முழுவீச்சில் செய்து வருகின்றன. குறிப்பாக தடுப்பூசிகளை வைப்பதற்கு குளிர்பதனவசதிகளை ஏற்படுத்துதல், ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டுள்ளன.

முக்கியமாக, அனைத்து மாவட்டங்களிலும் 190 மையங்களில் 2 கட்டங்களாக தடுப்பூசி திட்ட ஒத்திகை நடத்தப்பட்டு எந்தவித குறையும் இல்லாமல் தடுப்பூசி போடும் பணிகளை தொடங்குவதற்கான தயார் நிலை உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் புனேயில் இருந்து இன்று காலை 10.30 மணியளவில் கொரோனா தடுப்பூசிகள் சென்னை வர உள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “ 5.56 லட்சம் கொரோனா தடுப்பு மருந்து இன்று தமிழகம் வர உள்ளது. ஒருவருக்கு 30 நாள் இடைவேளையில் 2 முறை தடுப்பூசி போடப்படும். மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படும். சென்னையில் இருந்து தமிழகத்தின் 10 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்” என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Next Story