பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கம்: போக்குவரத்து துறைக்கு ரூ.5½ கோடி வருவாய்


பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கம்: போக்குவரத்து துறைக்கு ரூ.5½ கோடி வருவாய்
x
தினத்தந்தி 15 Jan 2021 11:43 PM GMT (Updated: 15 Jan 2021 11:43 PM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் 5 லட்சத்து 6 ஆயிரத்து 721 பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதன் மூலம் ரூ.5 கோடியே 46 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

இதுதொடர்பாக போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

போக்குவரத்து துறையின் சார்பில் பல்வேறு சிறப்பான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு, சென்னை மற்றும் பிற முக்கிய ஊர்களில் இருந்து போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. முதல்-அமைச்சரின் சீரிய முயற்சியின் காரணமாக கொரோனா நோய்த்தொற்று தமிழகத்தில் பெருமளவு குறைந்துள்ளது. பஸ்களில் 100 சதவீதம் மக்கள் பயணிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

இதையடுத்து பொங்கல் பண்டிகையையொட்டி தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் நலனைப் பாதுகாக்கும் வகையில், அரசு செயல்படுத்தி உள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, பொங்கல் பண்டிகையையொட்டி பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. இதனை பயணிகள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 11, 12, 13 மற்றும் 14-ந் தேதி காலை 6 மணி வரையில், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 10 ஆயிரத்து 276 பஸ்கள் இயக்கப்பட்டன. அவற்றில் 5 லட்சத்து 6 ஆயிரத்து 721 பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.

மேலும் இன்றைய நாள் வரையில் சென்னையில் இருந்து 45 ஆயிரத்து 275 பயணிகளும், பிற ஊர்களில் இருந்து 77 ஆயிரத்து 325 பயணிகளும் முன்பதிவு செய்து இருக்கின்றனர். போக்குவரத்து துறைக்கு இந்த பஸ்களின் இயக்கம் மூலம் ரூ.5 கோடியே 46 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

மேலும், சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கும், பிற பகுதிகளில் இருந்து மற்ற ஊர்களுக்கும் சென்றுள்ள பயணிகள் மீண்டும் திரும்புவதற்கு ஏதுவாக, 17 (நாளை), 18 (நாளை மறுதினம்) மற்றும் 19 (செவ்வாய்க்கிழமை) -ந் தேதிகளில் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு 9 ஆயிரத்து 543 பஸ்கள், சென்னையைத் தவிர்த்து மற்ற பிற இடங்களுக்கு 5 ஆயிரத்து 727 பஸ்கள் என மொத்தம் 15 ஆயிரத்து 270 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story