சென்னை வியாபாரியிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டிய வழக்கில் போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 16 Jan 2021 8:13 PM GMT (Updated: 16 Jan 2021 8:13 PM GMT)

சென்னை வியாபாரியிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டிய வழக்கில் போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சத்தியமங்கலம்,

சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த வியாபாரி மோகன் (வயது 45) என்பவரை இரிடியம் மற்றும் அரிய பொருட்கள் வாங்கி் தருகிறேன் என்று கூறி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரிக்கு வரவழைத்த ஒரு கும்பல் அவரை கடத்தியது. மேலும் ரூ.5 கோடி பணம் கேட்டு மிரட்டியது.

இதைத்தொடர்ந்து நடந்த பேரத்தில் மோகன் ரூ.35 லட்சம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் தனது மனைவி வித்தியாவிடம் கூறி அந்த கும்பல் கூறிய ஒரு வங்கி கணக்கில் ரூ.2½ லட்சத்தை செலுத்தினார். அதுதவிர மோகனின் வங்கி கணக்கில் இருந்த ரூ.18½ லட்சத்தையும் அந்த கும்பல் அபேஸ் செய்தது.

இதுகுறித்து வித்தியா அளித்த புகாரின்பேரில் 9 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த 6 பேரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் சத்தியமங்கலம் அருகே கொத்துக்காட்டில் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தபோது 2 பேரும் சென்னை வியாபாரி மோகனை கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டிய கும்பலை சேர்ந்தவர்கள் என்பதை ஒப்புக்கொண்டனர்.

மேலும் நடத்திய விசாரணையில் அதில் ஒருவர் தங்கமணி (56), இவர் விருதுநகர் மாவட்டம் புது சூரங்குடியில் உள்ள போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும், மற்றொருவர் கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்த சிவா (52) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story