ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் 46-வது கூட்டம்: இலங்கையில் தமிழ் இன மக்கள் உரிமைகளுடனும், கண்ணியத்துடனும் வாழ நடவடிக்கை எடுங்கள் - பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் 46-வது கூட்டம்: இலங்கையில் தமிழ் இன மக்கள் உரிமைகளுடனும், கண்ணியத்துடனும் வாழ நடவடிக்கை எடுங்கள் - பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 27 Jan 2021 7:11 PM GMT (Updated: 27 Jan 2021 7:11 PM GMT)

இலங்கையில் தமிழ் இன மக்கள் உரிமைகளுடனும், கண்ணியத்துடனும் வாழ நடவடிக்கை எடுங்கள் என்று பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

சென்னை,

இலங்கையில் வாழும் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் நிகழ்த்திய போர்க்குற்றங்கள் மற்றும் சர்வதேசச் சட்டங்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமானதொரு விசாரணை நடத்தி - பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நீதி வழங்குவதற்காக கடந்த காலத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் குறித்து விவாதிக்க நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்தின் 46-வது கூட்டம் தொடர்பாக இக்கடிதத்தை தங்களுக்கு தற்போது எழுதுகிறேன்.

கடந்த 6.1.2021 அன்று இலங்கை சென்ற நமது வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி தினேஷ் குணவர்த்தனேயை சந்தித்த பிறகு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இலங்கை தமிழர் பிரச்சினை குறித்த இந்தியாவின் நிலைப்பாடு பற்றி கீழ்க்கண்டவாறு விளக்கப்பட்டுள்ளது.

“இலங்கையில் இன ஒற்றுமையை நிலைநாட்டும் சமரசப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா எப்போதும் ஆதரவளித்து வருகிறது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமத்துவம், நீதி, அமைதி, கண்ணியம் ஆகிய தமிழ் இன மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது இலங்கையின் நலனுக்கே உகந்தது. பயனுள்ள அதிகாரப் பகிர்வினை அளித்து - 13 -வது அரசியல் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுவதும் இலங்கை அரசு அளித்துள்ள உத்தரவாதத்தில் அடங்கும். இதன் விளைவாக இலங்கையின் வளர்ச்சியும், முன்னேற்றமும் நிச்சயம் மேம்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட செய்திக்குறிப்பு - இலங்கையில் அதிகாரப் பகிர்வு குறித்த இந்திய அரசின் வழக்கமான நிலைப்பாட்டை மட்டுமே வெளிப்படுத்துவதாக இருந்தாலும், அதிலும் ஆக்கபூர்வமான தீர்வினை நோக்கி எந்தவித முன்னேற்றத்தையும் தந்து விடவில்லை. அதே நேரத்தில், நடைபெறவிருக்கின்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையக் கூட்டம் தொடர்பாக, நமது வெளியுறவுத்துறை மந்திரி கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

ஈழத்தமிழர்களின் கண்ணியத்தை நிலைநாட்டிடும் வகையில் நிர்வாக மற்றும் அரசியல் சட்ட ரீதியான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்வதிலும் இலங்கை அரசு படுமோசமாக தோற்று விட்டது. இந்த தருணத்தில், “ஈழத் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான விசாரணை நடைபெறுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்க - இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்” என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் இருக்கும் இந்தியா உள்ளிட்ட அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் இலங்கை தமிழர்களின் அரசியல் கட்சிகள் அனைத்தும் - ஒருங்கிணைந்து, ஒருமனதாக கோரிக்கை விடுத்துள்ளதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

கடந்த காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்ததை இந்த தருணத்தில் நினைவூட்ட விரும்புகிறேன். ஆகவே ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள மனித உரிமை ஆணையத்தின் 46-வது கூட்டத்தில் மற்ற உறுப்பினர்களுடன் இந்தியா ஒருங்கிணைந்து செயல்பட்டு - இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகளின் கோரிக்கை நிறைவேறுவதை பிரதமர் உறுதி செய்திட வேண்டும்.

அதே போல் 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக செயல்படுத்துவதற்கு பிரதமர் அளவிலும் - தூதரக அளவிலும் தக்க நடவடிக்கையை எடுத்திட வேண்டும். இதைவிட அதிக அதிகாரம் பெற்று, இலங்கையில் தமிழ் இன மக்கள் உரிமைகளுடனும், கண்ணியத்துடனும் வாழ வேண்டும் என்பது - உலகெங்கும் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களின் நீண்ட கால தாகம் என்பதை தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்களின் உடனடி முயற்சியும் - தலையீடும் ஈழத்தமிழர்களின் வரலாற்றில் முக்கிய இடம்பெறும் என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story