தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி முன்னிலையில் போயஸ் கார்டனில் உள்ள ‘வேதா நிலையம்’ நினைவு இல்லம் திறப்பு + "||" + Inauguration of 'Veda Nilayam' Memorial House at Boise Garden in the presence of TN CM Palanisamy
தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி முன்னிலையில் போயஸ் கார்டனில் உள்ள ‘வேதா நிலையம்’ நினைவு இல்லம் திறப்பு
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ‘வேதா நிலையம்’ நினைவு இல்லம் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி முன்னிலையில் இன்று திறக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
தமிழக முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும் இருந்த மறைந்த ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் ‘பீனிக்ஸ்' பறவை வடிவில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார்.
ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவருடைய ‘வேதா நிலையம்' வீட்டை நினைவு இல்லமாக மாற்றவேண்டும் என்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, அவ்வாறு நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதையடுத்து, ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது. நினைவு இல்லமாக மாற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. தொடர்ந்து சென்னை மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட 6 பேர் கொண்ட குழுவினர் வேதா நிலையத்தில் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு வசதியாக என்னென்ன ஏற்பாடுகளை செய்யலாம் என்பது குறித்து 3 கட்டங்களாக ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் இதுதொடர்பான பரிந்துரையை அந்த குழுவினர் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தனர். அந்த பரிந்துரையின்படி ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொண்டது. வீட்டுக்கு வர்ணம் தீட்டப்பட்டு, பொருட்கள் வைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்துவந்தன. அந்த பணிகள் தற்போது முடிவடைந்துவிட்டன.
‘வேதா நிலையம்' 10 கிரவுண்டு பரப்பளவில் 3 மாடிகளுடன் அமைந்துள்ளது. அந்த இல்லத்தில் நகரும் வகையிலான 32 ஆயிரத்து 721 பொருட்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 8 ஆயிரத்து 376 புத்தகங்கள் மற்றும் 394 நினைவுப்பொருட்களும் அடங்கும். 4 கிலோ 372 கிராம் எடை கொண்ட 14 வகையான தங்க நகைகளும், 601 கிலோ 424 கிராம் எடை கொண்ட 867 வெள்ளி பொருட்களும், வெள்ளி பாத்திரங்களும் உள்ளன.
சினிமா, அரசியல் என ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் கருப்பு-வெள்ளை அரிய புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள், ஜெயலலிதாவின் ஆளுமையை பிரதிபலிக்கும் பொருட்கள், அவர் படித்த புத்தகங்கள், நினைவுப்பொருட்கள், அவர் பயன்படுத்திய தனிப்பட்ட பொருட்களும் நினைவு இல்லத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜெயலலிதா பயன்படுத்திய பூஜை அறையும் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.
நினைவு இல்லமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள போயஸ் கார்டன் ‘வேதா நிலையம்’ இல்லத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து வருகிறார். தலைமைச்செயலாளர் க.சண்முகம், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், பொதுப்பணித்துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் க.மணிவாசன், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர்.
இதற்கிடையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, அவருடைய சகோதரர் தீபக் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் நினைவு இல்லத்தை திறக்க தடை கேட்டு அவசர வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த ஐகோர்ட்டு, நினைவு இல்லத்தை திறக்க தடைவிதிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. இதனால் திட்டமிட்டபடி இன்று நினைவு இல்லம் திறக்கப்பட்டது. விழாவில், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், வாரிய தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் தலைமை தாங்கினார்.