திருமயம் அருகே ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்


சீறிப்பாய்ந்த காளை
x
சீறிப்பாய்ந்த காளை
தினத்தந்தி 30 Jan 2021 7:06 AM GMT (Updated: 30 Jan 2021 7:06 AM GMT)

திருமயம் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 30 பேர் காயம் அடைந்தனர்.

திருமயம்:
ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மலையகோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 760 காளைகள் கொண்டுவரப்பட்டு பங்கேற்றன. 164 மாடுபிடிவீரர்கள் பங்கேற்று காளைகளை பிடித்தனர். 
காளைகளை வீரர்கள் போட்டி போட்டு பிடித்தனர். சில காளைகள் வாடிவாசலில் இருந்து வெளியே வரும் போதே துள்ளிக்குதித்து பாய்ந்து வந்தன. இதனை கண்ட மாடுபிடி வீரர்கள் சற்று தள்ளி ஓரமாக நின்றனர். சில காளைகள் பிடிபட்டன. தன்னை பிடித்து அடக்க முயன்ற வீரர்கள் சிலரை கொம்பால் முட்டி தூக்கி வீசின. ஓரிரு காளைகள் களத்தில் நின்றும், அங்குமிங்கும் பாய்ந்தோடி வீரர்களை விரட்டின.
30 பேர் காயம்
இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் கோபாலகிருஷ்ணன் (வயது 32), வீரராசு (23), முருகானந்தம் (23), லோகேஷ் (22), கணேசன் (25), கருப்பையா (40), சுறா மீன் (22), லோகேஸ்வரன் (21) உள்பட 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 
காயமடைந்த அனைவருக்கும் நச்சாந்துபட்டி ஆரம்ப சுகாதார அரசு நிலைய மருத்துவமனை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் மாயாண்டி, விஷ்வா, சுறாமீன் ஆகிய 3 பேரும் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் ஏற்படாமல் இருப்பதற்காக பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலகண்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளைகள் மற்றும் மாடுபிடிவீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் கூட்டம்
ஜல்லிக்கட்டை காண பொதுமக்கள் ஏராளமானோர் அந்த பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வந்திருந்தனர். லாரிகள், சரக்கு வேன்களின் மேலே ஏறி நின்று ஜல்லிக்கட்டை ரசித்து பார்த்தனர். போட்டியை பார்த்து கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். அருகில் உள்ள பாறைகளின் மேல் நின்றும் பார்த்து ரசித்தனர்.
---------

Next Story