சென்னையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட தடை விதிப்பு


சென்னையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட தடை விதிப்பு
x
தினத்தந்தி 2 Feb 2021 3:01 PM GMT (Updated: 2 Feb 2021 3:01 PM GMT)

சென்னையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட தடை விதிக்கப்படுவதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

சென்னை,

சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான நிதியை ஒதுக்கி கட்டுமானப்பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே 8-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கிவைத்தனர்.

இந்தநிலையில் தற்போது நினைவிடப் பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் பார்வையிடுவதற்காக கடந்த புதன்கிழமை காலை 11 மணி அளவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

இதையடுத்து ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்பட்டதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட தடை விதிக்கப்படுகிறது என்று பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. 

இது குறித்து பொதுப்பணித்துறை அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக முன்னாள் முதல்வர்கள் மறைந்த எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா நினைவிடங்கள் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த நினைவிடங்களில் தற்போது பொதுப்பணித்துறை சார்பில் அருங்காட்சியகம் அறிவுத்திறன் பூங்கா உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்படுகிறது. 

இவ்வாறு பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

Next Story