முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: திருப்பூர் நபர் கைது


முதல்-அமைச்சர்  எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு  வெடிகுண்டு மிரட்டல்: திருப்பூர் நபர் கைது
x
தினத்தந்தி 10 Feb 2021 1:25 PM GMT (Updated: 10 Feb 2021 1:25 PM GMT)

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திருப்பூரை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. போலீசின்  அவசர எண் 100-க்கு அழைத்த மர்ம நபர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்துவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களை அழைத்துச் சென்று முதலமைச்சரின் வீட்டில் சோதனை நடத்தினர். அவரது வீட்டைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தி வெடிகுண்டு எதுவும் கிடைக்காததால், போலீசுக்கு வந்த தகவல் பொய்யானது என்பது தெரியவந்துள்ளது.

பிரபலங்களின் வீடுகளுக்கு இதுபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நிகழ்வுகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. முதலமைச்சர் பழனிசாமி தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரது வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தொலைபேசியில் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வந்தனர்.  இதைத் தொடர்ந்து போலீசார், சைபர் கிரைம் போலீசாரிடம் போன் செய்த நபரின் எண்ணை அளித்தனர்.

சைபர் பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொலைபேசி அழைப்பு, திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அடுத்த காமநாயக்கன் பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரடிவாவி பகுதியைச் சேர்ந்த மயில்சாமி என்பவருக்குச் சொந்தமான செல்போன் எண்ணிலிருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அங்கு சென்ற திருப்பூர் போலீசார் மயில்சாமியைக் கைது செய்தனர்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். என்ன காரணத்திற்காக மிரட்டல் விடுத்தார், சதி நோக்கம் எதுவும் உள்ளதா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவரா? அல்லது அரசியல் கோபத்தால் விடுக்கப்பட்ட வெற்று மிரட்டலா என்பது போலீஸார் விசாரணைக்குப் பின் தெரியவரும்.

Next Story