கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - புதுச்சேரி கல்வித்துறை அறிவிப்பு


கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - புதுச்சேரி கல்வித்துறை அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Feb 2021 8:32 AM GMT (Updated: 21 Feb 2021 8:32 AM GMT)

புதுச்சேரில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

வளிமண்டல மேல் அடுக்கில் மேற்கு திசை காற்று சுழற்சி காரணமாகவும், கீழ் அடுக்கில் கிழக்கு திசை காற்றின் சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் 2 நாட்கள் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நேற்றைய தினம் புதுவையில் பகலில் வெயில் அடித்தது. மதியம் 12 மணி அளவில் லேசான மழை பெய்தது. ஆனால், மழை தொடரவில்லை. அதையடுத்து இரவு 10 மணியளவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. லேசாக பெய்ய தொடங்கிய மழை வேகமெடுத்து நள்ளிரவில் கனமழையாக மாறியது. தொடர்ந்து விடிய, விடிய மழை பெய்த வண்ணம் உள்ளது. அதிலும் அதிகாலை 4 மணிக்கு மேல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது.

கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி உள்ளது. நகரப்பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தற்போதும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் புதுச்சேரியில் இன்று 19 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Next Story