திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உளுந்தூர்பேட்டையில் வெங்கடேஸ்வரசாமி கோவில் கட்டும் பணி - எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்


திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உளுந்தூர்பேட்டையில் வெங்கடேஸ்வரசாமி கோவில் கட்டும் பணி - எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 23 Feb 2021 3:26 AM GMT (Updated: 23 Feb 2021 3:26 AM GMT)

உளுந்தூர்பேட்டையில் திருப்பதி தேவஸ்தானம் சார்வில், வெங்கடேஸ்வரசாமி கோவில் கட்டுமான பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

உளுந்தூர்பேட்டை,

திருப்பதி தேவஸ்தானம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெங்கடேஸ்வரசாமி கோவிலை கட்ட முடிவு செய்தது. அதன்படி தமிழகத்தில் கன்னியாகுமரியில் ஏற்கனவே கோவில் கட்டப்பட்டுள்ளது.

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான குமரகுரு வேண்டுகோளை ஏற்று 4 ஏக்கர் நிலத்தில் இக்கோவில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான நிலத்தை தேவஸ்தானத்திற்கு குமரகுரு எம்.எல்.ஏ. நன்கொடையாக வழங்கினார்.

அதைத்தொடர்ந்து கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நேற்று நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோவில் கட்டுமானப்பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டினார்.

தொடர்ந்து, யாகசாலைக்கு சென்ற அவருக்கு தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். அப்போது அங்கு பூர்ணாகுதி, திவ்ய தானம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. அதில் சுமார் 15 நிமிடங்கள் நின்றபடியே பங்கேற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றதற்கான கல்வெட்டை திறந்து வைத்தார்.

பின்னர், உளுந்தூர்பேட்டை-திருப்பதி புதிய வழி தடத்திற்கான பஸ் சேவையை முதல்-அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் திருப்பதி லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.

Next Story