பட்ஜெட் தாக்கலை புறக்கணித்து சட்டசபையில் இருந்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு - கூட்டத்தொடரில் பங்கேற்க போவதில்லை என்றும் அறிவிப்பு


பட்ஜெட் தாக்கலை புறக்கணித்து சட்டசபையில் இருந்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு - கூட்டத்தொடரில் பங்கேற்க போவதில்லை என்றும் அறிவிப்பு
x
தினத்தந்தி 24 Feb 2021 3:25 AM GMT (Updated: 24 Feb 2021 3:25 AM GMT)

பட்ஜெட் தாக்கலை புறக்கணித்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்கப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை தாக்கல் செய்தார். சட்டசபை நேற்று பிற்பகல் 11 மணிக்கு கூடியதும், அவரை இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய சபாநாயகர் ப.தனபால் அழைத்தார். இதைத்தொடர்ந்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார், அப்போது தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் தன்னை பேச அனுமதிக்குமாறு கேட்டார். ஆனால் அதற்கு பதில் அளித்த சபாநாயகர், ‘நான் ஏற்கனவே நிதி அமைச்சரை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய அழைத்து விட்டேன். எனவே நீங்கள் இப்போது பேச முடியாது. உங்களுக்கு மைக் தர முடியாது, மைக் இல்லாமல் பேசி விட்டு கிளம்பலாம்' என்றார்.

ஆனாலும் துரைமுருகன் பேசுவதற்கு அனுமதி கேட்டுக்கொண்டு இருந்தார். சபாநாயகர் அனுமதி மறுத்ததால் தி.மு.க. உறுப்பினர்கள் பட்ஜெட் உரையை வாசிக்க விடாமல் கடும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் துரைமுருகன் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். இதேபோல், காங்கிரஸ் உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.

கலைவாணர் அரங்க வளாகத்தில் எதிர்க்கட்சித்தலைவர் துரைமுருகன், பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் உரையை நிருபர்களிடம் படித்து காட்டினார். பின்னர் அவர் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சியில் தமிழக அரசின் கடன் ஒரு லட்சம் கோடி ரூபாயாக இருந்ததை இப்போது ரூ.5.70 லட்சம் கோடியாக மாற்றியிருக்கிறார்கள். எடுத்த எடுப்பிலே நிதி அமைச்சர் தமிழக அரசின் கடனை சொல்லுகிறார் என்றால் இந்த ஆட்சி, ஆட்சி செய்வதற்கு அருகதை அற்றது. ஆட்சி, நிதி நிர்வாகத்தை நிர்மூலமாக்கி இருக்கிறார்கள்.

எனவே இடைக்கால பட்ஜெட்டை கண்டித்து வெளிநடப்பு செய்து இருக்கிறோம். கடனாளி அரசாக நம்மை மாற்றியிருக்கிறது. டெண்டர் விட்டு பினாமிகளுக்கு கொடுத்து இருக்கிறார்கள். இது தான் அவர்களுக்கு தெரிந்த நிதி நிர்வாகம். மீண்டும் பொதுத்தேர்தல் நடக்கும், தி.மு.க. மகத்தான வெற்றியை பெறும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று வரும்போது நாங்கள் மீண்டும் சட்டசபைக்கு வருவோம். இது எங்கள் திடமான முடிவு. அது வரை இந்த கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி கூறியதாவது:-

இந்த இடைக்கால பட்ஜெட் மிக மோசமாக அமைந்துள்ளது. ரூ.5.70 லட்சம் கோடி கடன் உயரும் என்று சொல்லியிருக்கிறார்கள். நிதி நிலைமை அதலபாதாளத்திற்கு போய் விட்டது. முதல்-அமைச்சர் தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிடுகிறார், அதை செயல்படுத்த நிதி இல்லை. பிறகு ஏன் மக்களை ஏமாற்றி அறிவிப்பு வெளியிடுகிறார்கள்?. தேர்தலுக்காக அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். இந்த கூட்டத்தொடரை முழுவதுமாக காங்கிரஸ் புறக்கணிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. முகமது அபுபக்கர் கூறியதாவது:-

அ.தி.மு.க. அரசு பல அறிவிப்புகள் செய்து வருகிறது. அந்த அறிவிப்புகள் முழுமையாக நிறைவு பெறவில்லை. இந்த கூட்டத்தொடரில் புகழ்பாடுவார்கள். எனவே இந்த கூட்டத்தொடரை நாங்கள் புறக்கணிக்கிறோம். வேளாண் சட்டங்களுக்கு மத்திய அரசுக்கு ஆதரவாக அவர்கள் செயல்படுகிறார்கள். பெட்ரோல்; டீசல் விலை உயர்ந்துள்ளது. இதை அவர்கள் கண்டிக்கவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story