மாநில செய்திகள்

பிரதமர் மோடி இன்று புதுச்சேரி வருகை + "||" + Prime Minister Modi arrives in Pondicherry today

பிரதமர் மோடி இன்று புதுச்சேரி வருகை

பிரதமர் மோடி இன்று புதுச்சேரி வருகை
புதுவைக்கு இன்று வரும் பிரதமர் மோடி பா.ஜ.க. தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
புதுச்சேரி, 

புதுடெல்லியில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) சென்னை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பகல் 11.20 மணியளவில் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையம் வந்தடைகிறார். 
அங்கு    அவரை   கவர்னர்   தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பா.ஜ.க.வினர் வரவேற்கின்றனர். வரவேற்பு முடிந்ததும் பிரதமர் மோடி காரில் கோரிமேடு ஜிப்மர் கலையரங்கத்துக்கு செல்கிறார். அங்கு நடக்கும் அரசு விழாவில் கலந்துகொள்கிறார். 
அப்போது சதானந்தபுரம்-நாகப்பட்டினம் இடையேயான 4 வழிச்சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் காரைக்காலில் ரூ.491 கோடி செலவில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பொதுக்கூட்டம்

மேலும் சாகர்மாலா திட்டம், இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் செயற்கை இழையினால் ஆன ஓடுதளம், ஜிப்மர் ரத்த மையம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள மகளிர் தங்கும் விடுதியையும், புதுவை நகராட்சி   கட்டிடத்தையும் திறந்து வைக்கிறார்.
விழா முடிந்ததும் அங்கிருந்து கார் மூலம் லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்துக்கு வருகிறார். அங்கு நடக்கும் பா.ஜ.க. தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதற்காக அங்கு பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம்        முடிந்ததும்  பிற்பகல் 1.20 மணிக்கு மோடி புதுவையில் இருந்து புறப்பட்டு சென்னை செல்கிறார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு புதுவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசாருடன் துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜிப்மர் வளாகம், லாஸ்பேட்டை  ஹெலிபேடு மைதானம் என அனைத்தும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

கவர்னர் ஆய்வு 

பிரதமர் நிகழ்ச்சிகளில் அவருடன் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. புதுவையில் இன்று (வியாழக்கிழமை)   போக்கு வரத்தும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவையொட்டி ஜிப்மர் கலையரங்கத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் பூர்வா கார்க் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விளக்கி கூறினார்கள். 

5 அடுக்கு பாதுகாப்பு

பிரதமர் வருகையை முன்னிட்டு புதுவை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையம், ஜிப்மர் வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூடம், பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 
அந்த பகுதிகளுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அந்த பகுதிக்கு செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இதே போல் மாநில எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். நகரில் ஆங்காங்கே போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 

அடிக்கடி ரோந்து

அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாராவது வந்தால் அவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலில் கடலோர பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடலோர பகுதியில் யாராவது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்தால் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என்று மீனவர்களிடம் போலீசார் வலியுறுத்தி உள்ளனர். இதே போல் பிரதமர்  மோடி விமான நிலையத்தில் இருந்து ஜிப்மர் வளாகம், பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்லும் வழியில் போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு ஒத்திகை 

நேற்று காலை பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. இதில் பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து ஜிப்மர் வளாகம் செல்வது, அங்கிருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்வது போன்று ஒத்திகை நடத்தப்பட்டது. அந்த நேரத்தில் நகரம் முழுவதும் போக்குவரத்தும் மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் புதுவை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  அந்தந்த பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட  போலீசார் போக்கு வரத்தை சரி செய்தனர்.