16-ம் ஆண்டை நிறைவு செய்தது மனிதநேய அறக்கட்டளை: 169 சாதிகளைச் சேர்ந்த 3,505 பேருக்கு மத்திய, மாநில அரசுகளில் உயர் பதவி - சைதை துரைசாமி பெருமிதம்


16-ம் ஆண்டை நிறைவு செய்தது மனிதநேய அறக்கட்டளை: 169 சாதிகளைச் சேர்ந்த 3,505 பேருக்கு மத்திய, மாநில அரசுகளில் உயர் பதவி - சைதை துரைசாமி பெருமிதம்
x
தினத்தந்தி 28 Feb 2021 3:56 AM GMT (Updated: 28 Feb 2021 3:56 AM GMT)

தமிழகத்தில் 169 சாதிகளைச் சேர்ந்த 3,505 பேர் மனிதநேய அறக்கட்டளையில் பயிற்சி பெற்று மத்திய, மாநில அரசுகளின் உயர் பணிகளில் சேர்ந்துள்ளனர் என்று சைதை துரைசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சாதிகளை கடந்து, மதங்களை கடந்து சக மனிதனை உறவாக எண்ணுகின்ற சிந்தனைதான் மனிதநேயம். அதன் அடிப்படையில் 16 ஆண்டு காலத்தை பூர்த்திசெய்து இருக்கிறது, மனிதநேய கல்வி அறக்கட்டளை. சேவையை பிரதானப்படுத்திய பொது வாழ்க்கையை அமைத்துக்கொள் என்பது எம்.ஜி.ஆர். கடந்த 1974-ம் ஆண்டு எனக்கு வழங்கிய ஆலோசனைகளில் ஒன்று. அதை அரச கட்டளையாக ஏற்றுக்கொண்டதன் வெளிப்பாடுதான் மனிதநேய இலவச கல்வி அறக்கட்டளை. இதை 2006-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.

போதிய தகுதி இருந்தும் பொருளாதாரத்தில் பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட, விளிம்புநிலை, கிராமப்புற, விவசாய, கூலித் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அதேபோன்று அனைத்து சாதிகளிலும் உள்ள ஏழை மாணவர்களுக்கு தகுதி இருந்தும், பொருளாதாரம் மட்டுமே தடை என்ற நிலையில் மனிதநேய அறக்கட்டளை முழுமையான உதவிகளை முற்றிலும் இலவசமாகவே வழங்கி வருகிறது. இதுதவிர பார்வையற்ற மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

சிவில் சர்வீஸ் தேர்வுகள் மற்றும் மத்திய, மாநில பணியாளர் தேர்வு உள்ளிட்ட 51 வகையிலான பிரிவுகளுக்கான போட்டித்தேர்வுக்கு மனிதநேயம் இலவசப் பயிற்சி வழங்கிவருகிறது. தங்கிப் படிக்க உணவுடன் கூடிய விடுதி, பயிற்சி வகுப்புகள் மற்றும் டெல்லிக்கு செல்ல விமானப் பயண கட்டணம் போன்ற அனைத்தும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது. மனிதநேயம் அறக்கட்டளை மூலம் மாணவர்களுக்கு இலவசமாக செய்யப்படும் உதவிகளுக்கு யாரிடமும் நன்கொடை பெறுவதில்லை. இதுவரை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வசிக்கும் மனிதநேயமிக்க செல்வந்தர்கள் பலர் நன்கொடை வழங்க முன்வந்தபோதும் யாரிடமும் நன்கொடை பெறாமல், குடும்ப உறுப்பினர்களின் சொந்த நிதியில் இருந்து செலவு செய்யப்படுகிறது.

குறிப்பாக, உழைத்துச் சம்பாதித்த சொத்துகளை விற்பனை செய்து கிடைத்த பணத்தில் இந்த அறக்கட்டளை நடத்தப்படுகிறது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள, நான் வசிக்கும் சி.ஐ.டி. நகர் இல்லத்தையும், என் தந்தையார் பெயரிலுள்ள வேளச்சேரி திருமண மண்டபத்தையும் மனிதநேய அறக்கட்டளைக்கு தானமாக கொடுத்து இருக்கிறோம். மனிதநேய அறக்கட்டளைக்கு வாடகை கொடுத்துத்தான் நான் குடியிருந்து வருகிறேன்.

அனைத்து மாணவர்களும் இலவசமாக சிவில் சர்வீஸ் தேர்வுகள் மற்றும் மத்திய, மாநில பணியாளர் தேர்வுக்கு தயாராகும் வகையில் பொதிகை தொலைக்காட்சியில் காலை 10 மணி முதல் 11 மணி வரை பயிற்சி நடத்தப்படுகிறது. இதன்மூலம் லட்சக் கணக்கான மாணவர்கள் வீட்டில் இருந்தே படிக்கின்ற வசதியை பெற்று வருகிறார்கள். இறந்த ஏழைகளின் உடலை பாதுகாத்து இறுதிச்சடங்கு செய்வதற்கு வசதியாக குளிர்சாதனப் பெட்டி இலவசமாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் தினமும் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன் அடைகின்றன.

மனிதநேயம் மூலம் செய்துவரும் உதவிகளை அங்கீகரிக்கும் வகையில் இந்தியாவின் சிறந்த 41 சேவையாளர்களில் ஒருவராக என்னைத் தேர்வு செய்து போர்ப்ஸ் பத்திரிகை கவுரவம் செய்திருக்கிறது. அதேபோன்று இங்கிலாந்து இளவரசர், தலைசிறந்த சேவையாளர்களுக்கு லண்டன் பக்கிங்காம் அரண்மனையில் வழங்கிய விருந்தில் கலந்துகொண்டதற்கு காரணமும் மனிதநேயம்தான். தமிழகத்தில் மொத்தமுள்ள 259 சாதிகளில், மனிதநேயத்தின் பயிற்சியின் மூலம் 169 சாதிகளைச் சேர்ந்த 3,505 மாணவர்கள் மத்திய, மாநில அரசு உயர் பதவிகளில் சேர்ந்துள்ளனர். ஒட்டுமொத்த 259 சாதி மாணவர்களையும் அரசு உயர் பதவியில் அமர்த்துவதுதான் மனிதநேயத்தின் லட்சியம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story