படகு, சைக்கிள் ஊர்வலத்தை கவர்னர் தொடங்கிவைத்தார்


படகு, சைக்கிள் ஊர்வலத்தை கவர்னர் தொடங்கிவைத்தார்
x
தினத்தந்தி 12 March 2021 1:46 PM GMT (Updated: 12 March 2021 1:46 PM GMT)

75-வது ஆண்டு சுதந்திர தின தொடக்க விழாவை முன்னிட்டு படகு மற்றும் சைக்கிள் ஊர்வலத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி, மார்ச்
 75-வது ஆண்டு சுதந்திர தின தொடக்க விழாவை முன்னிட்டு படகு மற்றும் சைக்கிள் ஊர்வலத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். 

தொடக்க விழா 

இந்திய சுதந்திர தினத்தின் 75-வது ஆண்டு நிறைவு விழா 15.8.2022 அன்று கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய 75 வாரங்களுக்கு சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளை விமரிசையாக கொண்டாடும்படி மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டு உள்ளது. 
அதன்படி புதுச்சேரியில் 75 வார சிறப்பு நிகழ்ச்சிகளின் தொடக்க விழா   கடற்கரை காந்திதிடலில் நடந்தது. விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கி, அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்து காந்தியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

படகு ஊர்வலம்

இதனை தொடர்ந்து 75 மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட சைக்கிள் ஊர்வலம், 75 படகுகள் பங்கேற்ற மீனவர்களின் படகு ஊர்வலத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கொடியசைத்தும், மூவர்ண பலூன்களை பறக்க விட்டும் தொடங்கி வைத்தார். 
தொடர்ந்து 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கவர்னர் தொடங்கி வைத்தார். விழாவில் பாரதியார் பல்கலைக்கூட ஆசிரியர்களின் தேச பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன.
தடுப்பூசி 
விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், ‘இந்திய சுதந்திர தினத்தின் 75-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி இன்றைய தினத்தில் இருந்து 75 வாரமும் சிறப்பு நிகழ்ச்சிகளை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறோம். ஒவ்வொரு வாரமும் ஒரு நிகழ்ச்சி நடைபெறும். இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும். கொரோனா இன்னும் நம்மை விட்டு செல்லவில்லை. நம்முடன் தான் இருக்கிறது. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்’ என்றார்.
இசை நிகழ்ச்சி 
விழாவில் தலைமை செயலாளர் அஸ்வனி குமார், கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த மோகன், அரசு துறை செயலாளர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 
மாலை 6 மணிக்கு கடற்கரை சாலையில் காவல்துறை சார்பில் பேண்டு வாத்திய குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

Next Story